Propellerads
Navigation

'தொண்டன்'

கோலிவுட் திரையுலகில் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துகளுடன் கூடிய திரைப்படங்கள் உருவாக்கும் ஒருசில இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். அவர் இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்க வேண்டிய மிக அற்புதமான படைப்பு. இந்த நிலையில் சமுத்திரக்கனியின் அடுத்த படமான 'தொண்டன்' வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்.

இந்த படத்தின் தலைப்பை வைத்து அனைவரும் இது ஒரு அரசியல் படமாக இருக்குமோ என்று எண்ண தோன்றும். ஆனால் இது அரசியல் படம் இல்லை என்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனி தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அந்த விழாவில் கூறியதாவது: 'தொண்டன் என பெயர் வைத்திருப்பதால் இது அரசியல் படமா என கேட்கிறார்கள்.. நிச்சயமாக இல்லை.. பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவருக்கு வலிய சென்று உதவி செய்கிறானே, அவன் தான் தொண்டன்.. அப்படி நம் சமூகத்தில் உள்ள மனிதாபிமானம் கொண்ட மனிதர்களை பற்றி பேசும் படம் தான் இந்த தொண்டன் என கூறினார்..

இந்த படத்தில் சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர்களின் உன்னதமான பணியை பற்றி அழகாக விளக்கியுள்ள இந்த படம் அவருடைய இயக்கத்தில் வெளியாகவுள்ள 11வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய படங்களில் இதுதான் பெஸ்ட் என சொல்லும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்று சமுத்திரக்கனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள கல்லூரி ஒன்றில் அப்பாவி மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு கொடுமைதான் இந்த படத்தின் கரு. இருப்பினும் இந்த படத்தில் நிஜமும், கற்பனையும் கலந்த காட்சிகள் அடங்கியுள்ளதாக சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி, விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் நாயகி சுனைனா. சுனைனாவுக்கு இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தி கோலிவுட்டில் மீண்டும் ஒரு சுற்று வர இந்த படம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

மேலும் இந்த படத்தில் சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்பட நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் இருப்பதால் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

'ஆரஞ்சு மிட்டாய்', 'ஒருநாள் கூத்து' ,உள்குத்து' போன்ற படங்களுக்கு இசையமைத்த வளரும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலரின் பின்னணி இசையில் இருந்தே இவர் தனது அதிகபட்ச உழைப்பை இந்த படத்திற்காக கொட்டியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மதுரை மண்ணை சேர்ந்த இவர் சென்னை தரமணியில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து, பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக ஒருசில வருடங்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வசுந்தராதேவி சினிபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் வழங்கியதோடு, அனைவரும் பார்க்க வேண்டிய படம் என படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

'பாகுபலி 2' பரபரப்பு குறைந்துள்ள இந்த சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படம் 'அப்பா' படத்தை போல அனைவரையும் ஆதரவையும் பெற்று சமுத்திரக்கனிக்கு மேலும் ஒரு வெற்றிக்கனியை பெற்றுத்தருமா? என்பதை வரும் வெள்ளி அன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.
Share
Banner

Post A Comment: