Propellerads
Navigation

சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு விருது

அபுதாபி சுற்றுலா ஆணையத்தின் ஆதரவில் இந்த ஆண்டின் (2017) தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. 
 
இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள் நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. 
 
மேலும் சிறந்த பாடகருக்காக அனிருத், சிறந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் திரிஷா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த பாடகி சித்ரா, சிறந்த விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் மாதவன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது.

அதேபோல் மலையாளத்தில் மோகன் லால், நிவின் பாலி, லட்சுமி ராமகிருஷ்ணன், ஆஷா சரத் ஆகியோருக்கு சிறந்த நடிகர், நடிகை விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மோகன்லால், சித்ரா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வரவில்லை. அவர்களுக்கான விருதுகளை அவர்கள் சார்பில் வந்தவர்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும், பாடகர் மனோ, பாடகி உஷா உதூப் ஆகியோர் நடத்திய இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், நடிகை கத்ரினா கைப் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி, அபுதாபி சுற்றுலா ஆணையத்தின் பொது இயக்குனர் சைப் சயீத் கோபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரைப்பட விருது வழங்கும் விழாவில் துபாய், சார்ஜா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சிகளை நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகை தன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Share
Banner

Post A Comment: