அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
“கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்படுகிறோம்.
சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில் எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல் நாங்கள் பாடக்கூடாது. தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.
“எஸ்பிபி 50” என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய வேண்டும்” இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.
Post A Comment: