Propellerads
Navigation

புலி திரைப்படத்துக்குத் தடை?

 புலி திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர், தாகபூமி என்கிற தன்னுடைய குறும் படத்தைப் பெரிய திரைப்படமாக வெளியிடக் காத்திருந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் "கத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரி, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014-இல் வழக்கு தொடுத்தார்.
 இந்த வழக்கில் ஜனவரி 23-ஆம் தேதி 5 பேரும் ஆஜராக வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்று எதிர்தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 தொடர்ச்சியாக பலமுறை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அன்பு ராஜசேகர், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 அதில், கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி படத்தையும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இனிமேல் இயக்கி, தயாரித்து வெளிவரவுள்ள படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
 அந்த மனு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராஜசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Share
Banner

Post A Comment: