தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை அஜீத். சில நட்சத்திரங்கள் உருவாக்கப்படுவார்கள், சில நட்சத்திரங்கள் தானாக உருவாவார்கள். அஜீத் இரண்டாவது ரகம்.
எந்த பின்புலமும் இல்லாமல் தன் திறமை, உழைப்பு, நம்பிக்கை இவற்றையே மூலதனமாக கொண்டு இன்று புகழின் உச்சியில் இருப்பவர் அஜீத். இன்று அவருக்கு 46ஆவது பிறந்த நாள்.
அவர் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கலாம்...
ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில், பாலக்காடு சுப்ரமணிய ஐயருக்கும் சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினிக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் திகதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.
ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும், சென்னையில் வளர்ந்தார். ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கியவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மனது ஓடியது. யாரும் செய்யாத ஒன்றைச் செய்து சாதிக்க வேண்டும் என்கிற வெறிதான் இருந்தது.
தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர் பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். மோட்டார் சைக்கிள் கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார்.
பைக் பந்தயம் தான் தொழில் என்று தேர்ந்தெடுத்தார், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், நண்பர்களின் யோசனைப்படி ரிச் போயாக மாறினார். அஜீத்தின் வசீகர தோற்றமும், வித்தியாசமான குரலும் அவரை மீடியாவின் பக்கம் இழுத்தது.
மொடலிங், விளம்பர படம், என்று திரிந்த அவரை திரையுலகம் சுண்டி இழுத்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான துண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் பைக் ரேஸா, சினிமாவா என்ற கேள்வி வந்தபோது சினிமா என்று தீர்மானித்தார்.
1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் , அத்திரைப்படத்தின் இயக்குநர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பு நழுவியது. பின்னர், 1992ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அத்திரைப்படம் அவருக்கு சிறந்த புதுமுகத்துக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், அமராவதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் திரைப்படமாகும். அஜீத்தின் சினிமா பயணம் தொடர்ந்தது. 1995ல் வெளிவந்த ஆசை அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகான அவரது திரைப்பயணத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தது, பைக் ரேஸில் கலந்து கொண்டு நேர்ந்த விபத்து உட்பட உடல் முழுவதும் 23 இடத்தில் சத்திரசிகிச்சை நடந்தது.
சிகிச்சைக்காக ஓய்வு பெற்றபோது உடல் எடை கூடியது. இனி அஜீத் அவ்வளவுதான் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஒரு ஆண்டு இடைவெளியில் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக திருப்பதி திரைப்படத்தில் வந்து நின்றபோது எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள்.
மொழு மொழு முகத்துடன் ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்போது தாடி டிரண்ட்டை மீண்டும் தொடங்கி வைத்தது அஜீத் தான். கருப்பு முடி, முடியில்லாவிட்டால் விக் வைத்து எல்லோரும் நடித்துக் கொண்டிருந்தபோது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்து அசத்தியவரும் அஜீத் தான்.
வீட்டை மறந்து உழைப்பை மறந்து எதிர்காலத்தை மறந்து போஸ்டர் ஒட்டுவதிலும், பேனர் வைப்பதிலும் ஆர்வம் காட்டி இரசிகர் மன்றம் என்ற போர்வையில் திரியும் இளைஞர்களால் எதிர்காலம் பாழாகிவிடும் என தனது இரசிகர் மன்றத்தை கலைத்த ஒரே கலைஞன் அஜீத். தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுத்த ஒரே கலைஞன் அஜீத். இப்படி அவரது பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
அஜீத் வெறும் நடிகர் மட்டுமல்ல நல்ல குடும்பத் தலைவன், நல்ல தந்தை, நல்ல கணவன். எல்லாவற்றுக்கும் உதாரணமாக இப்போதும் திகழ்கிறார். சினிமா தவிர்த்து கார் ரேஸ், பைக் ரேஸ் என விளையாட்டு உலகிலும் வலம் வருகிறார்.
தன் மனைவியையும் பேட்மிட்டன் வீராங்கனையாக்கி அழகு பார்க்கிறார். வருமானவரித்துறை நுழையாத ஒரே ஹீரோவின் வீடு அஜீத் வீடு. அரசாங்கம் மிரட்டி விழாவுக்கு நடிகர்களை அழைக்கிறது என்று ஒரு முதல்வரை முன்னால்
உட்காரவைத்து பேசிய துணிச்சல் அஜீத்தினுடையது. பாஸ்போர்ட் அலுவலகமா, விமான நிலையமா? வாக்குசாவடியாக மக்களுடன் மக்களான நின்று தன் கடமையை செய்கிற நடிகர்.
இன்று அவரது பிறந்தாள். அவருக்கு நம் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்துங்கள்.
Post A Comment: