Propellerads

About

Navigation
Recent News

பாஸ்ட் & பியூரியஸ் 8

நடிகர்: வின் டீசல்
நடிகை: சார்லீஸ் தெரோன்
இயக்குனர்: கேரி கிரே எப்
இசை: பிரையன் டைலர்
ஓளிப்பதிவு: ஐகியூஸ் ஹைட்கின்

பாஸ் அண்ட் ப்யூரியஸ் 8-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் மற்றும் மிச்சல் ரோட்ரிகஸ் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் வின்டீசலை பார்க்க வரும் சார்லிஸ் தெரோன் என்னும் பெண், அவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அதனை செய்ய மறுக்கும் வின் டீசலிடம், தெரோன் ஒரு வீடியோவை காட்ட, அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடையும் வின் டீசல், தெரோன் சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கிறார்.

அதேநேரத்தில் மற்றொரு நாயகனான ராக்குக்கு அவரது மேலதிகாரியிடம் இருந்து ஒரு வேலை வருகிறது. அந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க திட்டமிடும் ராக், வின் டீசல் மற்றும் அவரது குழுவின் உதவியை நாடுகிறார். ராக்கின் அழைப்பை ஏற்று தனது குழுவுடன் செல்லும் வின்டீசல், ராக்குக்கு தேவையான பொருள் ஒன்றை கைப்பற்ற உதவி செய்கிறார். இவ்வாறு அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கையில், ராக்கை தாக்கிவிட்டு, அந்த பொருளை எடுத்துச் செல்லும் வின்டீசல், ராக்கை போலீசில் சிக்க வைக்கிறார்.

பின்னர் சிறையில் அடைக்கப்படும் ராக், அங்கு தனது விரோதியான ஜேசன் ஸ்டாதமை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ராக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவரும் அவரது மேலதிகாரி, வின் டீசலை கண்டுபிடிக்க ஜேசன் ஸ்டாதமுடன், ராக்கை இணைந்து பணியாற்ற சொல்கிறார். மேலும் வின்டீசலின் கூட்டாளிகளான ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன், லூடாகிரிஸ் உள்ளிட்டோரும் ராக்குக்கு உதவி செய்ய வருகின்றனர்.

இவ்வாறு வின்டீசலை கண்டுபிடிக்க திட்டம் தீட்டும் வேளையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வின் டீசல் அவர்களிடம் இருந்து `காட்ஸ் ஐ' எனப்படும் பொருளையும் திருடிச் செல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராக், ஜேசன் ஸ்டாதன், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோர் வின் டீசல் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று குழப்பமடைகின்றனர். பின்னர் வின் டீசலை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பாகங்களை பொறுத்தவரையில், ஒரு குழுவில் இருக்கும் ஒருவர், தனது குழுவை விட்டுப்போகவோ, அல்லது காட்டிக்கொடுக்கவோ கூடாது. ஆனால் இந்த பாகத்தில் வின் டீசல், தனது குழுவை விட்டுவிட்டு, தொழில்நுட்ப தீவிரவாதியான சார்லிஸ் தெரோனுடன் கூட்டு வைக்கிறார். எதற்காக கூட்டு வைக்கிறார்? எந்த காரணத்தால் அவர்களால் மிரட்டப்படுகிறார்? அந்த சதியில் வின் டீசலை மீட்க ராக், ஜேசன் ஸ்டாதம் என்ன முயற்சி செய்கின்றனர்? என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.

மற்ற பாகங்களில் ஒரு ஹீரோவாக வரும் வின் டீசல், இந்த பாகத்தில் ஒரு வில்லன் போன்று நடித்து மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மற்ற பாகங்களை போன்றே, இந்த பாகத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குழுவின் ஒரு உறுப்பினராக இருக்க முடியாமலும், தொழில்நுட்ப தீவிரவாதியிடம் சிக்கிக் கொண்டும், அதிலிருந்து மீண்டு வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் பாசத்தை வெளிப்படுத்தம் காட்சியிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராக் தனக்கே உரித்தான ஸ்டைலில், சிறந்த உடற்கட்டுடன் வந்து ரசிக்க வைக்கிறார். குறிப்பாக இந்த பாகத்தில் அவரது ஸ்டன்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டன்ட்டும் நம்புப்படியாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர் சிறப்பான உடற்கட்டுடன் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜேசன் ஸ்டாதம், எப்போதும் போல இந்த பாகத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் அனைவரையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்வது ரசிக்கும்படி இருந்தது. அந்த சண்டைக்காட்சியிலும், அவரது நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.

மற்றபடி மிச்செல் ரோட்ரிகஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரிஸ் கிப்சன், லூடாகிரிஸ், கர்ட் ரசல், லுகாஸ் பிளாக், சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக டைரிஸ் கிப்சன் தனக்குரிய ஸ்டைலில், ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார். அவரது நகைச்சுவைக்கு அரங்கமே அதிர்கிறது. அதுவும் தமிழுக்கு ஏற்றார் போல் அவரது நகைச்சுவை ஒன்றி அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது.

பாஸ் அண்ட் பியூரியஸ் தொடரை முதல்முறையாக இயக்கியுள்ள இயக்குநர் எப்.கேரி கிரேவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொடரின் 7 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், 8-வதாக வெளியாகியுள்ள இந்த பாகத்தை இயக்குநர் எப்.கேரி கிரே சிறப்பாக இயக்கியிருக்கிறார். மற்ற பாகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை ஒருசில காட்சிகளுக்கு வரவைத்து நியாபகப்படுத்துவது ரசிக்கும்படி இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், டப்பா கார்களை கொண்டும் சிறப்பான சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. விமானத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சி, சார்லிஸ் தெரோன் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கார்களை தன்வசப்படுத்துவது போன்ற காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது.

மேலும் உறைந்திருக்கும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்து வரும் நீர்மூழ்கி கப்பலை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சி என படம் முழுக்க பிரம்மாண்டமாக காட்டியிருப்பது சிறப்பு. 7-வது பாகத்தை போல இந்த பாகத்திலும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு ப்ளஸ். பல வகையான கார்களின் அணிவகுப்பு, புதுமையான கார்கள் என இந்த பாகத்திலும் பல வித்தியாசமான கார்களை பார்க்க முடிகிறது. மேலும் 7-வது பாகத்தோடு இந்த உலகத்தை விட்டு சென்ற, பால் வாக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பாகத்தின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, ரசிகர்களின் மனதில் நிற்கும்படியாக உள்ளது.

இவ்வாறு ரசிக்கும்படியான திரைக்கதையையும், மற்ற பாகங்களை போல அல்லாமல் இந்த பாகத்தில் வின் டீசலை வில்லனாக காட்டும் காட்சிகள் என திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார் கிறிஸ் மோர்கன்.

படத்தின் பின்னணி இசையில் ப்ரெயின் டெய்லர் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ப அவரது பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. ஸ்டீபன் எஃப்.விண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ஸ்டீபன் கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

மொத்தத்தில் `தி பேஃட் ஆப் த ப்யூரியஸ்' வேகம்.
Share
Banner

Post A Comment: