Propellerads
Navigation

இவன் தந்திரன்

நடிகர் கௌதம் கார்த்திக்
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்
இயக்குனர் கண்ணன் ஆர்.
இசை தமன் எஸ்
ஓளிப்பதிவு பிரசன்னா எஸ் குமார்

இன்ஜினியரிங் படித்து வந்த நாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பன் ஆர்.ஜே.பாலாஜி, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் பிரபலபான இடத்தில் கடை ஒன்றை ஆரம்பிக்கின்றனர். அங்கு லேப்டாப், கணினி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பல எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எலக்ட்ரானிக் மீது அதீத ஈடுபாடு உடைய கவுதம் கார்த்திக் பல்வேறு புதிய முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

அதன் பயனாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்ற, தனித்துவமான புதிய மொபைல் போன் ஒன்றையும் உருவாக்குகிறார். பின்னர் அந்த போனை விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இதுஒருபுறம் இருக்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவுதம் கார்த்திக்கிடம் இருந்து லேப்டாப் ஒன்றை வாங்கி செல்கிறார். அந்த லேப்டாப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இவர்களது சந்திப்பு மோதலுக்கு செல்கிறது.

அதே நேரத்தில் அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கேமரா மாட்டும் பணி கவுதம் கார்த்திக்குக்கு கிடைக்கிறது. கேமரா வைத்துவிட்டு, அதற்கான பணத்தை சுப்பராயனின் மச்சானான ஸ்டன்ட் சில்வாவிடம் கவுதம் கார்த்திக் கேட்க, பணம் கொடுக்காமல் கவுதமை விரட்டி விடுகிறார் சில்வா. இதனால் கடுப்பாகும் கவுதம் கார்த்திக், தனக்கு வரவேண்டிய பணத்தை சில்வாவிடம் வசூலித்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

இந்நிலையில், பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் தரமான கல்வி இல்லை என்று அமைச்சர் சூப்பர் சுப்பராயன், குறி்பிட்ட கல்லூரிகளுக்கு தடை விதிக்கிறார். அதில் நாயகி ஷ்ரத்தா படிக்கும் கல்லூரியும் ஒன்று. இவ்வாறாக கல்லூரிகளுக்கு தடை விதிப்பது போல் விதித்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சுப்பராயன் ஈடுபடுகிறார். அமைச்சருக்கு பணம் கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் பணம் கேட்க, பணத்தை கொடுக்க முடியாமல், மாணவர் ஒருவர் கவுதம் கார்த்திக் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த பிரச்சனைக்கு சுப்பராயன் தான் காரணம் என்று கவுதம் கார்த்திக்குக்கு தெரிய வர, தனது சாதுரியத்தின் மூலம் அமைச்சருக்கு எதிரான ஆதரங்களை திரட்டுகிறார். இதையடுத்து சூப்பர் சுப்பராயன் குறித்த தகவல்களை ரகசியமாக இணையதளங்களில் வெளியிடுகிறார். இதனால் சூப்பர் சுப்பராயனின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு, மீண்டும் அமைச்சராக முயற்சி செய்கிறார் சுப்பராயன்.

மறுபுறத்தில் அமைச்சரை மாட்டி விட்டது கவுதம் கார்த்திக் தான் என்பதை கண்டுபிடித்துவிடும் சில்வா, கவுதமை தேடி செல்கிறார். இந்நிலையில், கல்லூரி பிரச்சனையில் தன்னை பற்றிய தகவல் வெளியேறி விடக்கூடாது என்பதால், தனது மச்சான் சில்வாவையும், சுப்பராயன் கொலை செய்து விடுகிறார். இதையடுத்து அவரது பதவி பறிபோக காரணமானது கவுதம் தான் என்பதை அமைச்சர் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? அல்லது கவுதம் அமைச்சரை வெளிவரமுடியாத சிக்கலில் சிக்க வைத்தாரா? ஷ்ரத்தாவுடனான மோதல் காதலில் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவுதம் கார்த்திக், கல்லூரியில் இருந்து வெளியேறினாலும், செய்முறையில் இன்ஜினியரிங் மாணவர்களை விட சிறந்து விளங்குபவராக ஜொலிக்கிறார். இன்ஜினியராக இல்லாவிட்டாலும், அதற்குறிய தனித்துவத்துடன் வலம் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

காற்று வெளியிடை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், நடுத்தர வீட்டு பெண் என்று கூறிவிட்டு, பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பெண் போல இருப்பது படத்திற்கு மைனஸ்.

நகைச்சுவையில் ஆர்.ஜே.பாலாஜி ரசிக்க வைக்கிறார். பல கவுண்டர்கள் கொடுத்தாலும், ஒரு சில கவுண்டர்களுக்கே சிரிக்க முடிகிறது. இன்ஜினியரிங் படித்து வேலையின்றி இளைஞர்கள் கஷ்டப்படுவதை அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார். நகைச்சுவை கலந்த எதார்த்தத்தை எடுத்துரைத்திருக்கிறார்.

சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா இருவருமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அமைச்சருக்குண்டான கெத்துடன் வலம் வரும் சூப்பர் சுப்பராயன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி பாரத் ரெட்டி, மயில்சாமி, மதன் பாப் காமெடி கலந்த நடிப்புடன் காட்சிக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

படிப்பு இல்லை என்ற ஒரு குறை இல்லை. இன்ஜினியரிங் படித்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற எண்ணத்தில் இருப்பர்களுக்கு, தனது தனித்துவத்தின் மூலமாக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்கான முயற்சியில் தொடந்து ஈடுபட்டால் அடுத்தடுத்த நிலைக்கு செல்லலாம் என்பதை கூறியிருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். தனக்குரிய தனித்துவத்தின் மூலம் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு நல்ல கதையை சிறப்பாக இயக்கி இருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால், படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

தமனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. இவன் தந்திரன் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் டிஜிட்டல் லுக்கில் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `இவன் தந்திரன்' சிக்கலானவன்.
Share
Banner

Post A Comment: