நடிகர் கௌதம் கார்த்திக்
நடிகை சனா மக்புல்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி
இசை விஷால் சந்திரசேகர்
ஓளிப்பதிவு அனிஷ் தருண் குமார்
பர்மாவின் ரங்கூனில் வசித்து வரும் நாயகன் கவுதம் கார்த்திக், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இந்தியாவுக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும். நாளடைவில் கவுதமின் வேலை சித்திக்கு பிடித்துப் போகிறது. அதேநேரத்தில், ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளை கவுதம் காப்பாற்றுகிறார். அதேபோல், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும்போது அவரையும் கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த பாசம் மேலும் அதிகமாகிறது.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.
ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.
Post A Comment: