Propellerads
Navigation

வேறேதும் வேண்டாம்: சல்மான் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான். 50 வயதை கடந்த போதிலும் இன்னும் திருமணம் செய்யாமல் தனி மனிதராக வாழ்ந்து வருகிறார். இயக்குநர் கபீர் கான் மற்றும் இவரது கூட்டணியில் உருவாகியுள்ள "டியூப்லைட்" படத்தின் பிஸி புரொமோஷனில் இருந்த சல்மான், நமக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது, "தற்போது உள்ள வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வேறேதுவும் வேண்டாம்" என்று கூறினார். மேலும் அவர் அளித்த பேட்டியை கீழே பார்ப்போம்...

* சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் உங்களை அளவாக நடிப்பவன் என்றீர்கள், அது பற்றி...?

ரசிகர்கள் என்னை சிறந்த நடிகராக ஏற்று கொள்ளாத போது நான் மட்டும் சிறந்த நடிகன் என்று கூறி கொண்டிருந்தால் அது நன்றாக இருக்காது. அதற்கு, நானே என்னை அளவாக நடிப்பவன் என்று கூறுவது சிறந்தது. இருந்தாலும் நான் சிறந்த நடிகனா இல்லையா என்பதை ரசிகர்களிடமே விட்டுவிடுகிறேன். டியூப்லைட் படத்தை பார்த்த பிறகு நிச்சயம் என்னை அளவாக நடிப்பவன் என்றே கூறுவார்கள்.

* கபீர்கான் உடன் தொடர்ந்து பணியாற்றுவது பற்றி...?
நீண்டகாலமாகவே கபீர் கானை எனக்கு தெரியும். அவரின், "காபூல் எக்ஸ்பிரஸ், நியூயார்க்" போன்ற படங்களை பார்த்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. என்னதான் கபீர் படம் என்றால் கூட, அவர் கூறும் கதை எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். நானும், அவரும் மூன்று படங்கள் பண்ணிவிட்டோம். தொடர்ந்து அவருடன் படம் பண்ணுவது அவருடன் எனக்கு இருக்கும் புரிதல் தான் முக்கிய காரணம்.

* டியூப்லைட் படம், லிட்டில் பாய் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறதே...?

ஹாலிவுட்டில் வெளியான லிட்டில் பாய் படத்தை நான் பார்த்தது கிடையாது. டியூப்லைட் படத்தின் பெரும்பகுதி முடிந்ததும், நான் அந்த ஹாலிவுட் படத்தின் உரிமத்தை வாங்கிவிட்டேன். ஏனென்றால் இப்படத்தை எனது தாயின் பெயரில் தயாரிக்கிறேன், அவர் தான் இப்படத்திற்கு தயாரிப்பாளர், ஆகையால் படம் ரிலீஸாகும் சமயத்தில் சிக்கல் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக அப்படி செய்தேன். லிட்டில் பாய் படம் தந்தை - மகன் உறவை பேசும் படமாக இருந்தது. டியூப்லைட் படம் சகோதரர்கள் பாச உறவை பேசும் படமாக இருக்கும். இரண்டு படத்திற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. கபீர்கான், இப்படத்தை முழுமையாக வேறு ஒரு பாதையில் தன்னுடைய ஸ்டைலில் மாற்றியிருக்கிறார்.

* நீங்கள் ஒரு பெரிய ஸ்டார், இன்னும் ஏதேனும் உங்கள் வாழ்க்கையில் கிடைக்க வேண்டியது இருக்கா...?

அப்படியெல்லாம் எதுவுமில்லை, என் வாழ்க்கைக்கு தேவையானது கிடைத்துள்ளது. என்னை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நொடியும் சிறப்பாக செல்ல வேண்டும், முந்தைய நிமிடத்தை விட அடுத்த வரப்போகும் நிமிடம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். தற்போது நான் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது, வேறு எதுவும் வேண்டாம்.

* ஏதோ ஒரு வகையில் நீங்கள் கவலையாக இருந்தால் என்ன செய்வீர்கள்..?

நான் எப்போதாவது கவலையுடன் இருந்தால் எங்கள் வீட்டு காவலாளி, பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள் ஆகியோரை பார்ப்பேன். எப்படி அவர்கள் இப்படி கடுமையாக உழைத்து, வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று எண்ணுவேன். வழக்கம் போல் அவர்கள் அவர்களின் பணியை செய்கிறார்கள், சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று வியப்புடன் பார்ப்பேன். அவர்களை பார்த்து எனக்குள் உள்ள கோபத்தை குறைத்து கொள்வேன். அதோடு, அவர்களோடு ஒப்பிடுகையில் ஆண்டவன் நம்மை நன்றாக வைத்திருக்கிறான் என்று எண்ணி கொள்வேன். அதன்பின் நான் இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன்.
இவ்வாறு சல்மான் கான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Share
Banner

Post A Comment: