Propellerads
Navigation

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் தரமணி : டைரக்டர் ராம்

ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேசன் தயாரித்துள்ள படம் அண்டாவக்காணோம். புதுமுக இயக்குனர் வேல்மணி இயக்கியுள்ள இந்த படத்தில் திமிரு ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும், ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேசன் உருவாகி பத்து ஆண்டுகளாகி விட்டதால், அந்த நிறுவனம் தயாரித்த படங்களின் இயக்குனர்கள் அனைவரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில், இயக்குநர்கள் ராம், பிரம்மா, லட்சுமி ராமகிருஷ்ணன், பாலாஜி தரணீதரன், யுரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது டைரக்டர் ராம் பேசுகையில், தமிழ்நாட்டிலுள்ள எந்த முன்னணி நடிகர்களும் நடிக்காமல், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகளிடம் கால்சீட் கேட்காமல் ஒரு கம்பெனி இயங்க முடியும் என்பதை நிரூபித்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார். நடிகர்களை நம்பாமல் கதையை நம்பி படம் தயாரிப்பவர் அவர். இந்த சூதாட்டத்தில் வரவும் உண்டு, செலவும் உண்டு, வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு. காத்திருத்தலும் உண்டு. இன்னொரு விசயம் உண்டு. எந்த இயக்குனர், தயாரிப்பாளராக இருந்தாலும் அவர்களுக்கிடையே படம் முடிவதற்குள் முரண்பாடு வந்து விடும். ஆனால் ஜே.எஸ்.கே.சதீஷிடம் அப்படி ஏற்படுவதில்லை.

காரணம் அவர் தனது பிரச்சினையை வெளிப்படையாக சொல்லி விடுவார். அவரது பர்சில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை முன்பே சொல்லி விடுவார். ஒரு கலையை இயக்குனரை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும். மேலும், அவர் தயாரிப்பில், நான் இயக்கியுள்ள தரமணி படத்தை சென்சாருக்கு கொண்டு சென்றோம். சென்சார் ஆயிடுச்சு. 14 கட்டு கொடுக்கிறோம். யுஏ வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். நான் சொன்னேன். 14 கட் வேண்டாம் ஏ சான்றிதழ் வாங்கிக்கொள்கிறோம் என்றேன். மற்ற தயாரிப்பாளர்களாக இருந்தால் கட் பண்ணிவிட்டு யுஏ சான்றிதழ் வாங்க மீண்டும் சென்சார் பண்ணலாம் என்பார்கள். ஆனால் ஜே.எஸ்.கே அப்படி சொல்லவில்லை. கதை கெட்டுப்போகும் என்பதால் காட்சிகளை கட் பண்ண அவர் ஒத்துக்கொள்ளவில்லை. முக்கியமாக, இந்த தரமணி, நிஜமாலுமே 18 வயது தாண்டியவர்கள் பார்க்க வேண்டிய படம். அப்படியென்றால் அதற்கு ஏ சான்றிதழ் வாங்குவதுதான் சரியாக இருக்கும் என்றார்.

சென்சார்போர்டு அதிகாரியிடம் சென்று எங்களுக்கு யுஏ வேண்டாம் ஏ சான்றிதழே கொடுத்து விடுங்கள் என்று கேட்ட ஒரே தயாரிப்பாளர் அவராகத்தான் இருப்பார். 13 வயது குழந்தைகள் பெற்றோருடன் தியேட்டருக்கு வந்து சங்கடமாகி விடக்கூடாது. தவறான காட்சிகள் இல்லாத படம்தான். ஆனால் கதை பேசக்கூடிய அமைப்புக்கு அப்படி இருப்பதால் யுஏ வேண்டாம் என்று துணிச்சலாக கேட்டார்.

மேலும், இந்த அண்டாவக்காணோம் படத்தை இயக்கியுள்ள வேல்மணி என்னுடன் கல்லூரியில் படித்தவர். நகரத்தைச் சேர்ந்த அவர் கிராமத்துக்குப்போய் இந்த படத்தை எடுத்தது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. ஒரு பாட்டில் அந்த பக்கம் ஹீரோ முகம், இந்த பக்கம் ஹீரோயின் முகம். இதை வைத்து நான் பாடலை படமாக்குவேன் என்பது இயக்குனரின் தைரியத்தை நம்பிக்கையை காட்டுகிறது. இது போதும் நான் பண்ணிக் காட்டுகிறேன் என்பது கதையின் மேல் உள்ள நம்பிக்கை. அண்டாவக்காணோம் டைட்டீலில் நிறைய அர்த்தம் உள்ளது. பீப் பிரியாணி அண்டாக்களில்தான் கிண்டுவார்கள். இந்த கதைக்கு அரசியல் அடையாளம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. படம் பார்த்தால்தான் தெரியும் என்றார்.
Share
Banner

Post A Comment: