ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு குழந்தையை தாய் கருவில் சுமப்பது போல தான், வலிகள் மிகுதியாக இருந்தாலும் குழந்தையின் பிறப்பிற்காக காத்திருப்பது போல் படத்தின் வெளியிட்டிற்காக ஒரு இயக்குநர் காத்திருப்பர்.
அனைத்து திரைப்படங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றாலும் 'பாகுபலி', 'எந்திரன் 2.0 ' போன்ற திரைப்படங்களுக்கு சொல்லவா வேண்டும், ஒரு பூதம் புதையலை காத்துவருவது போல் அப்படத்தின் இயக்குநர் மட்டும் அல்ல ஒட்டு மொத்த குழுவும் காக்க வேண்டும், அப்படி பட்ட பிரம்மாண்ட படங்களில் வேலை செய்யும் அனைத்து கலைஞர்களுக்கும் மிக பெரிய பொறுப்புண்டு அதிலும் குறிப்பாக வசனகர்த்தா என்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கும், ஏன் என்று சொன்னால் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், கதாபாத்திரங்களின் தேர்வு எந்த அளவிற்கு முக்கியமோ அதே முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வசனம், இந்த பகுதி சரி இல்லை என்று சொன்னால், அந்த படம் நிச்சயம் தோல்விதான் என்று அடித்து சொல்லலாம்.
தமிழ் சினிமா உலகில் இடைப்பட்ட காலங்களில் வசன கர்த்தாவிற்கான இடம் குறைந்து கொண்டே வந்தது படத்தின் இயக்குநரே வசனத்தையும் கவனித்து வந்த நிலையில் சமீபகாலமாக இவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது, அந்த துறையில் தற்போது முதல் இடத்தில உள்ள இளம் எழுத்தாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா, என்று இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், அவருடைய அலுவலகத்தில் நாம் அவரை பேட்டி எடுக்க சென்ற போது மிகப்பெரிய கவிஞர்கள் குடும்பத்தின் பின் புலத்தோடு திரைத்துறைக்குள் இவர் வந்தாலும் அதனை தன் தலையில் சற்றும் ஏற்றிக்கொள்ளாமல் மிகவும் பிஸியான வேலை நேரத்திலும் நமக்காக நேரம் ஒதுக்கி சிரித்த முகத்துடனேயே பேச துவங்கினார், அவர் தான் மதன் கார்க்கி வைரமுத்து, இப்போது அவருடன் இணைந்து பேட்டியினுள் பயணிப்போம் வாருங்கள்...
'கண்டேன் காதலை', 'இளமை இதோ இதோ' ஆகிய இரண்டு படங்களுக்கும் பாடல் எழுதியிருந்தாலும் 2010 சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குநர் ஷங்கர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இவர்கள் காம்போவில் வெளியாகி மிகப்பிரமாண்டமான வெற்றி அடைந்த திரைப்படமான 'எந்திரன்'ல் நீங்கள் எழுதிய 'இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ' மற்றும் 'பூம் பூம் ரோபோ' ஆகிய பாடல்கள் தான் தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டியெல்லாம் உங்களை அறிமுகம் செய்து வைத்தது, அப்படத்தில் உங்களுக்கு கிடைத்த அனுபவம் பற்றி கூறுங்களேன் " நீங்கள் கூறியது உண்மை தான் எந்திரனுக்கு முன்பாகவே இரண்டு படங்களுக்கு பாட்டு எழுதிவிட்டேன் ஆனாலும் கூட எந்திரன் தான் என்னை வெளிக்கொண்டு வந்த படம் என்றே கூறலாம், படத்தின் இசைவெளியிடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது, அதற்காக நானும் என்னுடைய அப்பாவும் சென்று இருந்தோம், விழா மாலை நேரத்தில் என்பதால் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த விடுதி அறையில் தங்கியிருந்தோம், எப்படியோ இணையதளங்களில் எந்திரன் பாடல் வெளியாகிவிட்டது, அதனை டவுன்லோடு செய்து, என் அப்பாவிடம் ஒரு ஆர்வத்தில் போட்டுக்காண்பித்தேன் வரிகளை கேட்டு விட்டு 'மிகவும் நன்றாக உள்ளது வரிகள் அனைத்தும் புதுமையாக உள்ளது' என்று கூறினார் அது எனக்கு கிடைத்த முதல் மற்றும் மிகப்பெரிய அங்கீகாரம் அதன் பின் ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதிவிட்டேன், பாகுபலி உட்பட பல படங்களுக்கு தமிழில் வசனங்களும் எழுதிவிட்டேன், கடந்து சென்ற காலத்தை எண்ணி பார்க்கும் போது அழகிய பூஞ்சோலைகளில் விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி ஒரு ஆனந்தம் நமக்கு கிடைக்குமோ அப்படி உள்ளது அது என் வாழ்நாளில் நடந்த ஒரு அழகிய கனவும் கூட" என்று கூறினார்.
'பாகுபலி' குடும்பத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள் அப்படத்தில் உங்களுடைய வசனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது அதன் பற்றி சொல்லுங்கள் என்று நாம் கேள்வி கேட்க " பாகுபலி என்பது எங்களுடைய ஐந்து ஆண்டுகால உழைப்பு, எங்களுடைய வாழ்க்கை, ஒரு முறை இயக்குநர் ராஜமெளலியிடம் இருந்து அழைப்பு வந்தது நானும் நேரடியாக சந்தித்தேன், கதையை முதலில் விவரித்தார், அதற்கான தமிழ் வசனங்களுக்கான பேச்சுவார்த்தையில் தொடங்கினோம், அவர்கள் மனதில் இப்படத்தின் வசனத்தை நாம் இப்போது பேசும் நடைமுறை தமிழில் வசன அமைப்பை அமைக்கலாம் என்று எண்ணிருந்தார்கள் மிகப்பெரிய கலந்துரையாடலுக்கு பின் சங்க கால முறையில் உள்ள தமிழ் உச்சரிப்பிலேயே வசனங்களை எழுத சம்மதம் வாங்கினேன், அதன் பின் ஒரு நாள் நான், இயக்குநர் ராஜமெளலி, சத்தியராஜ், ராணா, பிரபாஸ்,தமன்னா, அனுஷ்கா என அனைவரும் ஒரு அறையில் தரையில் அமர்ந்துக்கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்கான மாதிரி வசனங்களை எழுதி அவர்களையே பேசவைத்து பார்த்தோம், மொழி நடை எப்படி உள்ளது என்பதை பார்க்க, இறுதியாக நீங்கள் திரையில் பார்த்த மொழிநடையை உறுதி செய்தோம்" , இதனிடையே கிளிக்கி மொழி எப்படி வந்தது என்ற கேள்விக்கு "பாகுபலிக்கான வசன வேலைகள் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இயக்குநர் ஒரு முறை என்னிடம் காலகேயனின் கதாபாத்திரத்தை விவரித்து இதற்கு ஸ்பெஷலா எதாவது ஒரு மொழி உருவாக்க வேண்டும் என்று எண்ணினார், அப்போது எனக்கு தோன்றிய ஒரு சின்ன ஐடியாதான் கிளிக்கி மொழி பழங்காலத்தில் அரசர்கள் அரசவையில் பேசுவதற்கும், ராணுவ படையுடன் உரையாடுவதற்கு சில குறியீடுகளை மொழியாக பயன்படுத்தி வந்தனர், பல சிறிய கூட்டங்களை கூட தங்களுக்கென்று ஒரு மொழியை உருவாக்கினார்கள் அந்த மொழியின் அடிப்படை நாவில் எழுப்பப்படும் ஒரு விதமான சப்தத்தை மையமாக வைத்து எழும் அதனை மையப்படுத்தி தான் இந்த கிளிக்கி ஆனால் இம்மொழி இவ்வளவு பெரிய கிளிக் ஆகுமென்று நாங்கள் நினைக்கவில்லை"
பாகுபலி 2 திரைப்படத்தின் அனுபவங்கள் பற்றி கூறுங்களேன் "பாகுபலி படத்தின் முதல் பாகத்தை விட இரணடாம் பாகம் இன்னும் கூடுதலாக எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்துள்ளது குறிப்பாக அந்த விசாரணை நடக்கும் காட்சியை நான் எழுதி முடித்து இயக்குநரிடம் விவரிக்கும்போதே அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி விட்டார் அந்த அளவிற்கு ஆழமான மிகவும் அழுத்தமான வசனங்கள் நிறைந்திருக்கும், ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ்க்கும் இடையேயான வசனங்கள், ராணாவிற்கும் அனுஷ்காவிற்கும், நாசருக்கும் சத்யராஜ்க்கும் இடையே ஏற்படும் வசனங்கள் ஒரு அழகிய ஓவியம் போல் அமைந்தது" என்று கூறினார்.
பாகுபலி படத்திற்க்காக ஐந்து ஆண்டுகாலம் உழைத்துள்ளீர்கள் நீங்கள் எழுதிய வசனங்களிலேயே எந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் ரசித்து எழுதினீர்கள் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே 'பல்லாளதேவன்' என்று கூறினார், ஏன் என்ற கேள்விக்கு "அவன் ஒரு மிகசிறந்த கவிஞன், உங்களுக்கெல்லாம் அவன் ஒரு முரட்டுத்தனமான வில்லன், முரடன், கொடுங்கோலனாக தானே தெரியும், ஆனால் என் பார்வையில் அவன் ஒரு மிக சிறந்த கவிஞன், மற்ற கதாபாத்திரங்கள் உணர்ச்சியின் உச்சத்தில் சக மனிதர்களுடன் கோபத்தை, ஆதங்கத்தை , காதலை வெளிப்படுத்தும் சமயத்தில் இவன் மட்டும் தேவசேனா கட்டியிருந்த சங்கிலியை , கோட்டையின் சுவரை, தனது கிரீடத்தை பார்த்து பேசுவான், அப்படி பேசும் ஒவ்வொரு வசனங்களும் மிக அற்புதமாக திரைகளில் தோன்றி கைதட்டல்கள் பெற்று செல்வதால், அவன் ஒரு மிக சிறந்த கவிஞனாக மீண்டும் மீண்டும் எனக்கு தோன்றுகிறான்" என்று கூறினார்.
மீண்டும் எந்திரன் பற்றி பேசலாம் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே படத்தின் பாகம் இரண்டில் அதே கூட்டணியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்களேன் "இயக்குநர் ஷங்கரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் மிக சிறந்த சிற்பிகள் நம்மை மிக அழகாக நாமே அறியாத அளவிற்கு செதுக்கி விடுவார்கள், இப்படத்திலும் பாடல்கள் எழுதியுள்ளேன் அது மட்டுமின்றி சில காட்சிகளுக்கு வசனமும் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது அதற்காக இருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு தன் புன்னைகை உடன் விடைபெற்றார் மதன் கார்க்கி
Post A Comment: