தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குநர் தாசரி நாரயண ராவ் காலமானார். அவருக்கு வயது 75.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் தாசரி நாராயண ராவ். இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள பாலகொல்லுவில் பிறந்த தாசரி நாரயண ராவ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 151 படங்களை இயக்கி உள்ளார்.
53 படங்கள் தயாரித்துள்ளார். 250 படங்களில் வசனகர்த்தாவாகவும், பாடல்கள் இயற்றியும் உள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர்காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சர் ஆகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தேசிய விருதுகள், 9 நந்தி விருதுகளும், 4 பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். அதிகபடங்களை இயக்கி லிம்கா சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தெலுங்கு படவுலகில் நடிகரும், இயக்குனருமான மோகன் பாபுவை அறிமுகம் செய்தவரும் இவர் தான்.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்றால் அவதிப்பட்டு வந்த தாசரி நாராயணராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அம்மா எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார்.
தாசரி நாரயண ராவ்வின் மறைவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் பிரபலங்களும், தெலுங்கு சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Post A Comment: