Propellerads
Navigation

ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த தமிழன்.. வியப்பில் ஆழ்ந்த நேதாஜி

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒவ்வெரு இந்தியரின் உயிர்மூச்சாய் ஒலித்த வாசகம் ஜெய்ஹிந்த். இந்த வார்த்தையை கேட்டாலே இந்தியனின் ரத்தத்தில் சுதந்திர தாகம் ஆறாய் பாயும். இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி மக்களிடையே பரவ செய்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கை இந்திய மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.

ஆனால், முற்றிலும் மாறாக ஜெய்ஹிந்த் என்ற வாசகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது பலருக்கு தெரியாது. மேலும் அந்த வீரத்தமிழனிடம் உலகையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி ஹிட்லர் மன்னிப்பு கேட்ட வரலாறும் தற்போது தெரிய வந்துள்ளது.

ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்ற நூலினை வரலாற்று ஆசிரியர் ரகமி என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலில் இந்திய சுதந்திர போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த வீரத்தமிழனின் பெருமை ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா மொழிவாரியாக தனி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட குமரியில் பிறந்த செண்பகராமன், திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். மாணவராக இருந்த காலங்களில் இந்திய விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

அப்போது இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளியான சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்பவர் செண்பகராமனின் துணிச்சலையும், ஆர்வத்தையும் கண்டு அவருக்கு உதவி செய்தார்.

அவரது உதவியுடன் இந்தியாவிலிருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்த போது இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை படித்தார்.

பின்னர் பட்டப்படிப்புக்காக ஜெர்மனி சென்றார். அங்கு இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி மூலம் இந்திய விடுதலைக்கு செண்பகராமன் ஆதரவு திட்ட தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் தான் ஜெர்மனி மன்னர் கெய்சர் நட்பு கிடைத்தது. 1930-இல் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

1933ல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்ட போது அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது வியன்னாவில் நடந்த ஒரு மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸை முதன் முறையாக சந்தித்தார்.

இந்திய தேசியத் தொண்டர் படை (பின் நாட்களில் இதுவே இந்திய தேசிய ராணுவமாக உருவெடுத்தது) திட்டம் பற்றி கேள்விப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ், தன்னுடைய இந்திய தேசியப் படை குறித்து செண்பகராமனுடன் கலந்தாலோசித்து இருக்கிறார்.

ஆலோசனையின் முடிவில் தான் எப்போதும் சொல்லும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை செண்பகராமன் உச்சரிக்க, அந்த வாசகம் சுபாஷ்சந்திர போஸை வெகுவாக ஈர்த்தது. பின்னர் அதனையே தேசியப்படையின் தாரக மந்திரமாக்கி விட்டார் சுபாஸ்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தையில் பெருமையை உணர்த்தும் வகையில் செண்பகராமன் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு முறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது, சுதந்திரம் பெற கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த செண்பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஆவேசமடைந்த செண்பகராமன், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் இந்திய தலைவர்களின் திறமைகளை பற்றி நீங்கள் தரக்குறைவாக பேசுவதை என்னால் அனுமதிக்க முடியாது என கூறினார்.

உலகமே பார்த்து மிரண்ட ஹிட்லரிடம் இதுகுறித்து நீண்ட நேரம் வாக்குவாதத்தில் செய்தார். ஆதாரங்களுடன் பேசிய செண்பகராமனின் வாத திறமையை கண்டு வியந்த ஹிட்லர் இறுதியில் பணிந்தார்.
 
செண்பகராமனிடம் மன்னித்து கொள்ளும்படி கேட்க, அவரோ வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்து பூர்வமாக கேளுங்கள் என்று வலியுறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் ஹிட்லரின் விசுவாசிகளான நாஜிக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. செண்பகராமனை கொல்ல சதி செய்து அவரது சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றனர்.

தொட்டிலில் அழும் பிள்ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும் என ஜெர்மனியில் ஒரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்ட கொடுங்கோலனான ஹிட்லரை நேருக்கு நேராக நின்று எதிர்த்து கேள்வி கேட்டு அடிபணிய வைத்தவர் வீரத்தமிழன் செண்பகராமன்.

வீரத்தமிழன் செண்பகராமனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலையை கடந்த 17.7.2008 அன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: