Propellerads
Navigation

மதுரை கிரானைட் குவாரிகளில் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

மதுரையில் சட்டவிரோதமாகவும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் கிரானைட் குவாரிகள் செயல்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை விசாரணை நடத்த சட்ட ஆணையராக நியமித்தது.

அவர் விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில், சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவது குறித்தும், முறைகேட்டை தடுப்பது குறித்தும் 193 பரிந்துரைகளையும் அவர் கொடுத்திருந்தார்.

மேலும், கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக சிலர் புகார் செய்தனர். இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி, நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடங்களை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

அறிக்கையை ஆய்வு செய்த ஐகோர்ட்டு, கிரானைட் முறைகேடு உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாமா? அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலம் விசாரணை நடத்தலாமா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களுடன் ஆலோசனை செய்து, தமிழக தலைமை செயலாளர் ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் செய்த 193 பரிந்துரைகளில், சுமார் 119 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் இருந்து ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உள்பட 4 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய 6 வார காலஅவகாசம் தேவை என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு சகாயம் தரப்பு வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இந்த வழக்கில் நரபலி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுவதால், சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று அவர் வாதிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், தமிழக அரசு ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்பதால், விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டனர். மேலும், இதுதான் தமிழக அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.
Share
Banner

Post A Comment: