தமிழ் சினிமா, தமிழக அரசியல் என பிசியாக இருந்த குஷ்பு, சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக பேசிய பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நடிகை பாவனா பாலியல் தொல்லை குறித்து பேசிய குஷ்பு, பாவனாவை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, அரசியல் என்று விட்டு தள்ளிவிடலாம். ஆனால் நாட்டில் முன்னோடியாக நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருவதாகவும், மனிதனின் வாழ்க்கையை நடித்து காட்டும் நடிகர், நடிகைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை என்றும் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒரு அரசே செயல்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் பேசினார்.
குஷ்புவின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகள் நிகழ்ந்தபோது வாய் திறக்காத குஷ்பு சக நடிகைக்கு பாலியல் கொடுமை என்றால் பொங்குவது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.
நடிகையை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகளை ஒரே வாரத்தில் கேரள காவல்துறையினர் பிடித்து நீதியின் முன் நிறுத்தியுள்ள நிலையில் கேரள முதல்வர் மீது குஷ்பு சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தேவைதானா என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
மேலும் சினிமாவை பார்த்து யாரும் கெட்டு போவதில்லை என்றும், நாட்டின் முன்னோடியாக நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருவதாக குஷ்பு கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்பதை நாம் விவரிக்க விரும்பவில்லை. தொடர்ந்து சினிமா சம்பந்தமான மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த செய்திகளை படித்து வரும் அனைவருக்கும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியும். எளிமையான, அனைவரும் அணுகும் முதல்வராக இருந்து வரும் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆட்சியை குஷ்பு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கடுமையான விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
Post A Comment: