Propellerads
Navigation

அபூர்வ சகோதரர்களுக்கு போட்டியாக பானுமதி இயக்கிய சண்டி ராணி


ஹாலிவுட்டில் வெளிவந்த கார்ஸிகன் பிரதர்ஸ் என்ற படத்தை தழுவி தமிழில் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம் அல்ல) என்ற பெயரில் தமிழில் படமாக எடுத்தார்கள். 1949ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் எம்.கே.ராதா இரட்டை வேடங்களில் நடித்தார் ஹீரோயினாக நடித்தவர் பானுமதி, ஆச்சார்யா இயக்கினார், ஜெமினி பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் நடித்த பானுமதி, இதே படத்தில் ஆண்கள் இரட்டையர்கள் என்பதற்கு பதிலாக பெண்கள் இரட்டையர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார். அப்போது உருவானதுதான் சண்டிராணி கதை.

சுகுமாரராஜா என்ற மன்னருக்கும் கலாராணி என்ற மகாராணிக்கும் இரட்டை பெண்குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆட்சியை பிடிக்க காத்திருக்கும் தளபதி பிரசண்டன் மாகராணியை கொன்று மன்னரை பைத்தியமாக்கி சிறையில் அடைக்கிறான். பிறந்த இரட்டை குழந்தைகளை மன்னரின் விசுவாசமிக்க மந்திரியும், சேவகனும் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரு குழந்தை பிரசண்டனிடம் மாட்டிக் கொள்ள இன்னொரு குழந்தையுடன் சேவகன் காட்டுக்குள் ஓடுகிறான். அரண்மனையில் வளரும் குழந்தை சம்பா ராணியாகவும், காட்டுக்குள் வளரும் குழந்தை சண்டி ராணியாகவும், வளர்கிறார்கள். கொடியவர்களிடமிருந்து சண்டிராணி எப்படி வென்று நாட்டை பிடிக்கிறார் என்பது கதை.

இதில் இரண்டு ராணிகளாக பானுமதி இரட்டை வேடத்தில் நடித்தார். இவருடன் என்டிஆர்., ரங்காராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பரணி ஸ்டூடியோ சார்பில் பானுமதியே தயாரித்து இயக்கினார். சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்தார். 1953ல் வெளிவந்த இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தாலும் அபூர்வ சகோதரர்கள் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
Share
Banner

Post A Comment: