Propellerads
Navigation

பராசக்திக்கு போட்டியாக எம்.ஜி.ஆர் நடித்த படம்


நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமான படம் பராசக்தி. இந்த படம் தயாராகும்போதே இதற்கு போட்டியாக என் தங்கை என்ற படம் தயரானது அதில் நடித்தது எம்.ஜி.ஆர்.

பராசக்தி படம் தயாராவதற்கு முன்பு தமிழ்நாட்டில் பராசக்தி, என் தங்கை என்ற இரண்டு நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தது. இரண்டுமே அண்ணன், தங்கை பாசக் கதைகள். இரண்டு நாடகங்களையும் இணைத்து ஒரே கதையாக்கி அதனை பராசக்தி என்ற பெயரில் எடுக்க ஏவிஎம் செட்டியார் விரும்பினார். ஆனால் இதற்கு என்தங்கை நாடக ஆசிரியர் டி.எஸ்.நடராஜன் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஏவிஎம் செட்டியார் பராசக்தி நாடகத்தையே பராசக்தி படமாக எடுக்க முடிவு செய்தார். கருணாநிதி வசனம் எழுத சிவாஜி நடிக்க படம் ஆரம்பமானது.

இதை கேள்விப்பட்ட அசோக் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் என் தங்கை நாடகத்தை படமாக தயாரித்து பராசக்திக்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்தது. இதில் எம்.ஜி.ஆர் அண்ணனாகவும், இ.வி.சரோஜா தங்கையாகவும் நடித்தனர். கண்பார்வையற்ற தங்கைக்காக வாழ்கிறான் அண்ணன். அண்ணனுக்கு பாரமாக இருக்க கூடாது என்பதற்காக தங்கை செத்துப்போக அவள் பிணத்துடன் எம்.ஜி.ஆர் கடலுக்குள் இறங்குவதாக படம் முடியும். படம் முழுக்க அழுகையும், சோகமும்தான்.

1952ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கினார். நரசிம்ம பாரதி, பி.எஸ்.கோவிந்தன், மாதுரிதேவி, சக்ரபாணி, எம்.என்.ராஜம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சில மாத இடைவெளியில் என் தங்கையும், பராசக்தியும் வெளிவந்தது. கருணாநிதியின் வசனம், சிவாஜியின் நடிப்பு, அதிகமான நட்சத்திரங்கள், பிரமாண்ட தயாரிப்பால் பராசக்தி வெற்றி பெற்றது. சோக காட்சிகள் நிறைந்த என் தங்கை தோல்வி அடைந்தது.
Share
Banner

Post A Comment: