Propellerads
Navigation

வாய்மை

நடிகை    பானு
இயக்குனர்    செந்தில்குமார் ஏ
இசை    அவுக்கத்
ஓளிப்பதிவு    ராசாமதி

இளம் வயதிலேயே கணவனை இழந்த பூர்ணிமா பாக்யராஜ், கஷ்டப்பட்டு தனது மகன் பிரித்வியை வளர்த்து வருகிறார். வளர்ந்து பெரியவனாகும் பிரித்வி, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரித்வி வேலை செய்யும் கட்டிடத்திற்கு எதிரே சமூக சேவகர் ஒருவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதம் நாடெங்கிலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் சமூக சேவகர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரை எங்கிருந்து சுட்டனர் என்பதை ஆராயும் போலீசார், பிரித்வி வேலை செய்யும் கட்டிடத்தில் இருந்துதான் அவரை சுட்டுள்ளனர் என்பது அறிந்து அங்கு சென்று சோதனை செய்கின்றனர். அப்போது, அந்த கட்டிடத்தில் பிரித்வி மட்டுமே இருக்கிறார். அங்கிருந்து துப்பாக்கியையும் கைப்பற்றும் போலீசார், பிரித்விதான் கொலை செய்தது என்று அவனை பிடித்து ஜெயிலில் அடைக்கின்றனர். அவர்தான் குற்றவாளி என்று கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, அதை நிறைவேற்றியும் விடுகின்றனர்.

மகன் இறந்த சோகத்தில் இருக்கும் பூர்ணிமாவையும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கின்றனர். அப்போது, நீதிபதி, வக்கீல்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகவே இருக்கிறார். இவருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கூறி பல்வேறு தரப்பிலிருந்து கூறி வந்தாலும், ஒரு சிலர் இவருக்கு தூக்குத் தண்டனை அளிக்கக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இந்தியாவில் ஒரு பெண்ணை தூக்கில் போட்டது கிடையாது. இதனால் குழப்பமடைந்த நீதிபதி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமித்து, அவர்களிடம் 2 மணி நேரம் சட்டத்தை ஒப்படைத்து பூர்ணிமாவுக்கு தூக்குத்தண்டனை வழங்கலாமா? வேண்டாமா? என்று தீர்ப்பு வழங்க முடிவு செய்கிறார். அதன்படி, சாந்தனு பாக்யராஜ், தியாகராஜன், கவுண்டமணி, ராம்கி, முக்தா பானு, ஊர்வசி, மனோஜ் கே.பாரதி, பிரசாத், நமோ நாராயணா, வெங்கட், ரோஸ், அங்கிதா உள்ளிட்டோர் பூர்ணிமாவை விசாரணை செய்ய நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் விசாரித்து பூர்ணிமாவை குற்றவாளி என்று நிரூபித்தார்களா? உண்மையான குற்றவாளி யார் என்பதை அறிந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தூக்குத்தண்டனை அவசியமா? என்ற கேள்வியோடு வெளிவந்திருக்கும் மற்றொரு படம்தான் வாய்மை. ஆரம்பத்தில் படம் காட்சியாக விரிந்தாலும், ஒருகட்டத்தில் விசாரணை என்ற பெயரில் கதைக்களம் ஒரே அறைக்குள் வந்து அமைகிறது. அதன்பிறகு, படத்தின் முக்கால் வாசி காட்சிகள் அனைத்தும் அந்த ஒரே அறைக்குள் முடிந்துவிடுகிறது. இருப்பினும், விசாரணை காட்சிகள் மற்றும் தூக்குத்தண்டனை குறித்து ஒவ்வொருவரின் மாற்றுக் கருத்தும் படத்தை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.

சட்டத்தின் பிடியில் சிக்கி சில அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி இறக்க நேரிடுகிறது. ஒருகட்டத்தில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரியவந்தபோதும் பறித்த உயிரை திரும்ப கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
எனவே, தூக்குத் தண்டனை தேவையில்லை என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் வரவேற்கக்கூடியதாக இருக்கிறது.

படத்தின் மொத்த நீளமே ஒன்றரை மணி நேரம்தான். இந்த கதைக்கு இந்த நேரம் போதுமானது என்பதை புரிந்து படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தில்குமார். அவருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் நாயகனான சாந்தனு பாக்யராஜுக்கு இப்படம் கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஒவ்வொருவரின் கேள்விகளும் பதில் சொல்லும் தோரணையில் வித்தியாசமான முகபாவனைகளை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கவுண்டமணியின் கவுண்டர் வசனங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும், இவரின் அறிமுகமே படத்தில் ரசிகர்களிடம் பெரிய கைதட்டலை பெற்றுவிடுகிறது. தியாகராஜன் உண்மை கிடையாதா? நீதி கிடையாதா? என உரக்கப் பேசும் வசனங்கள் செயற்கையாக தெரிகிறது. மற்றபடி, ராம்கி, முக்தா பானு, மனோஜ் கே.பாரதி, பிரசாத், நமோ நாராயணா, வெங்கட், ரோஸ், அங்கிதா உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்து படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படத்தின் பின்னணி இசைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்றிருக்கிறது.

மொத்தத்தில் ‘வாய்மை’ வெல்லும். 

CRITIC'S RATING:  1.5/5
AVG READERS' RATING: 1.5/5
Share
Banner

Post A Comment: