தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு – மோகனாம்பாள் ஆகியோரின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும் நீதிபதி என்.கண்ணதாசன் – எஸ்.கே.கீதா ஆகியோரின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கி அருள்நிதி – கீர்த்தனா திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் அருள்நிதி– கீர்த்தனா ஆகியோர் கருணாநிதி கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் மீது மலர் தூவி கருணாநிதி வாழ்த்தினார்.
மண விழாவுக்கு வந்தவர்களை கலைஞர் அரங்க வளாக வாசலில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், இயக்குனர் அமிர்தம், டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்றனர். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
நேற்றிரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ரோசையா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, சிவகுமார், விஷால், விவேக், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Post A Comment: