கமலின் ஒவ்வொரு படங்களும் பல தடைகளை தாண்டிதான் வெளியாகி வருகிறது. இதில் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்பட்ட தடைகள் எண்ணற்றவை. இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையில் கமல் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவே அறிவித்தார். இருப்பினும், பல்வேறு பிரச்சினைகளை தாண்டி அந்த படம் வெளிவந்து வெற்றிநடை போட்டது.
‘விஸ்வரூபம்’ படம் எடுக்கும்போதே, அந்த படத்தின் 2-ம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை கமல் எடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து ‘விஸ்வரூபம்-2’ படத்தின் உரிமையை கமலிடம் இருந்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட சில பணச்சிக்கல்களால் ‘விஸ்வரூபம் -2’ படம் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது, ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், ‘விஸ்வரூபம் 2’ வெளிவருமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், விஸ்வரூபம் 2- பிரச்சினையில் கமல் ஒரு புது முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால், ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை திரும்ப பெற்று, அதை தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.
ஏற்கெனவே, கமல் விஸ்வரூபம் படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம்தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கூடிய விரைவில் ‘விஸ்வரூபம் 2’ வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


Post A Comment: