புதிய ஆட்சி மாற்றத்தில் இலங்கையின் சூழ்நிலை நன்றாக இருப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்திய திரைப்பட நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான ஆர்.ராதாரவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் மலைநாட்டுப் பகுதி மிக அழகாகக் காணப்படுவதால் இங்கு சினிமாவிற்கு நிரந்தரமாக வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும் என தெரிவித்த ராதாரவி தான் மிக விரைவில் அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்துடன் மீண்டும் வருவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து அங்கு உரையாற்றிய நடிகர் ராதாரவி, ‘நான் இதற்கு முன்பு இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தேன். ஒரு முறை என்னை விமானநிலையத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதற்கு பிறகு இந்த முறை நான் வந்திருக்கின்றேன். தற்பொழுது புதிய ஆட்சி மாற்றம் காரணமாக இலங்கையின் சூழ்நிலை நன்றாக இருக்கின்றது.
நான் நுவரெலியாவிற்கு சென்றிருந்த பொழுது இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லக்கூடிய எமது மக்களையும் சந்தித்தேன். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் நான் அறிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. அதேபோல இங்கிருக்கின்ற மற்ற சமூகங்களையும் குறை கூற விரும்பவில்லை. ஏனென்றால் தற்பொழுது ஒரு சுமூகமானநிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது நாங்கள் அதனை குழப்பக்கூடாது.
ஆனால் ஒரு விடயம் மாத்திரம் எனக்கு தெளிவாக தெரிகின்றது. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பல விடயங்களை சாதிக்க முடியும். அதனை இங்குள்ள அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். நான் இங்கு வந்து பார்த்தவுடன் சில சினிமா சம்பந்தமான விடயங்களை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நான் மிகவிரைவில் அவ்வாறான ஒரு திட்டத்துடன் மீண்டும் வருவதற்கு உத்தேசித்துள்ளேன்.
அதன்போது இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்க கல்வி இராஜாங்க அமைச்சர் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்’ என்று தெரிவித்தார்.
Post A Comment: