பெருந்தோட்ட பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தனிவீட்டு திட்டத்தினூடாக எதிர்காலத்தில் தோட்டங்களை கிராமங்களாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
'பெரும்பாலான பகுதிகளில் கிராமங்கள் உள்ளபோதும் தோட்ட தொழிலாளர் வர்க்கத்துக்கு கிராமங்கள் இல்லை. அதனால், தனி வீட்டுதிட்டத்தினூடாக தோட்டங்களை கிராமங்களாக மாற்றுவோம். கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றியது போல இந்த அரசாங்கம் ஏமாற்றப்போவதில்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழா, தலவாக்கலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்றது. இதன்போது, 370 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது தலவாக்கலையில் கூடிய மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிபடுத்தினர்.
அந்த ஜன திரளை கண்டவுடனே தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சேவைகளை பெற்றுகொடுக்க வேண்டுமென தீர்மானித்துவிட்டோம். இன்று அதே இடத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வீடமைப்புக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
1994 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது, பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தேன். எனினும், அதுசரியான முறையில் கைகூடவில்லை. இருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இம்முறை நான் பிரதமராகவும் மலையக மக்களின் சார்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பி.திகாம்பரமும் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக கே.வேலாயுதமும் கல்வி இராஜாங்க அமைச்சராக வீ.இராதகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளோம்.
தற்போது பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள், அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இனி இவர்களுக்கு தனியான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுமே தவிர், மீண்டு லயன்கள் உருவாக்கப்படாது. இந்த நாட்டில் ஏனைய மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் மலையக மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான வீடமைப்புத் திட்டமும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.
மலையகத்தில் கல்வி, வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக 25 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன. இதன்மூலம் நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.
கடந்த ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் சுகபோகங்களை அனுபவிக்க சாதாரண மக்கள் கஷ்டங்களை எதிர்கொண்டனர். ஆனால், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து மக்களுக்கும் மைத்திரி அரசாங்கத்தில் நன்மைகள் கிட்டியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்து வருடங்களில் செய்யத் தவறியதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூறு நாட்களில் செய்து காட்டியுள்ளதோடு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.
நாம் ஆரம்பித்துள்ள பணிகளை நிறைவேற்ற எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இன்றைய இந்த விழாவானது, அமைச்சர் திகாம்பரத்தின் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சியையும் மக்கள் செல்வாக்கையும் எடுத்துகாட்டுகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.
Post A Comment: