சோவியத், சீனகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உலகநாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும் அம்முரண்பாடுகள் எதிரொலித்தன. இதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் பிளவு நோயால் பாதிக்கப்பட்டு இரண்டாக உடைந்தது. இத்தருணத்தில் சோவியத் உருசியாவில் உள்ள லுமும்பா பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வந்த ரோகன விஜய வீரா தனது கல்வியை இடைநிறுத்தி விட்டு நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் தோழர் சண்முகதாசன் தலைமையில் செயல்பட்டு வந்த இலங்கைக் கம்யூனிஸ்ட்(சீனச்சார்பு) கட்சியில் இணைந்தார்.
இளைஞரான ரோகன விஜய வீராவின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையெனக் கட்சி கருதியதால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் பணியாற்ற இவரைப் பணித்தது. 1967இல் கட்சித் தலைமையுடன் முரண்பட்டு வெளியேறிய ரோகன விஜய வீரா கட்சி அமைப்பின் கீழ் அணி திரட்டப்பட்ட இளைஞர்களைக் கொண்டு “சனத்தா விமுக்தி பெரமுனா” என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார். “மலையகத் தமிழர்கள் எமது உழவர்களின் நிலங்கள் பறிபோவதற்குக் காரணமானவர்கள். இவர்கள் “இந்திய விஸ்தரிப்புவாதிகளின் கையாள்கள்” என்ற இனவாதப் பரப்புரையைச் சிங்கள இளைஞர்கள் இடையில் பரப்பத் தொடங்கினார். மலையகத் தமிழர்கள் சிங்களவர்களின் எதிரிகள் என்ற கருத்து நிலைப்பாடு சிங்கள இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மலையகத் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் உருவான காலம் எது?
இலங்கைப் புத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையென அடையாளப்படுத்தப்படும் அநகாரிக்க தர்மபாலா அவர்கள் 1880இல் கிறித்துவர்களுக்கெதிரான பரப்புரையை நடத்தினார். இதன் விளைவாக 1915 இல் இம்மக்களுக்கெதிரான தாக்குதல்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக அவர் இந்திய வம்சாவழியினரை நோக்கி, “தென்னிந்தியத் தெருப்பொறுக்கிகள்” என்றார். இதற்கும் மேலாகச் சென்று “கீழ்ச்சாதியினர் எமது நாட்டில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.” என்றார். இவ்வாறான கருத்து நிலைப்பாடு 1920 முதல் மலையகத் தமிழர்களுக்கெதிராக இலங்கையின் அரசியல் களத்தில் தொடங்கியதை அறியலாம். இதே இனவாதம் பூர்வீகத் தமிழர்களுக்கெதிராக 1936இல் பரன கொட தலைமையில் அமைந்த அமைச்சர் அவையில் எதிரொலிக்கத் தொடங்கியது.
இவ்வாறு தொடங்கப்பட்ட இனவாதத்தைச் சிங்கள அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் ஊதியத்திற்காக இன்றுவரை தமிழர்களுக்கெதிராகக் கையாண்டு வருகிறார்கள். இந்தப் பயணத்தில் அய்க்கிய தேசியக் கட்சியும் இலங்கை சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒருவரை ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு நடக்கிறார்கள் என்பதை அண்மையில் முன்னாள் இலங்கைக் குடியரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் தன்னிலை அறிக்கையின் மூலம் அறியலாம்.
இந்த இனவாதச் சாலையை மெருகூட்டும் வகையில் வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துச் சிங்கள இளைஞர்கள் இடையில் உலாவவிட்டார் ரோகன விஜய வீரா. இவரது தவறான பரப்புரை மலையகத் தமிழர்களுக்கெதிராக மட்டுமல்லாமல் பூர்வீகத் தமிழர்களுக்கெதிராகவும் பயணிக்கத் தொடங்கியது. மறுபுறம் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலையாவதற்கு வழிகோலியதோடு இலங்கை அரசு நடத்திய இன அழிப்புக்கும் துணை போனதென்றே கூறலாம்.
இந்த இயக்கத்தின் நோக்கம் என்னவாக இருந்தது?
ரோகன விஜய வீரா தலைமையில் இயங்கிய சனத்தா விமுக்தி பெரமுனாவின் முதல்நிலைப் போராட்டம் என்பது ஒரே நாளில் ஆயுதமேந்திய தாக்குதல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதாக இருந்தது. இந்நோக்கத்தை மையமாகக் கொண்டு 1971இல் மே 5ஆம் நாள் இரவு நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களைத் தாக்குவது, பின் தலைநகரை நோக்கி முன்னேறுவது என்ற திட்டத்தைக் கொண்டிருந்தார்கள். செய்தித் தொடர்புகள் இன்று போல் இல்லாத காலம் அது. எனவே இவர்களின் தாக்குதலைத் தொடங்கும் அறிவிப்பு ஆங்காங்குள்ள மற்ற உறுப்பினர்களைச் சென்றடைய வானொலி நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்ததாகக் கூறப்படுகின்றது.
வானொலி மூலம் குறித்த நேரத்தில் குறித்த திரைப்படப் பாடலொன்று ஒலி பரப்பப்படும் போது தாக்குதலைத் தொடுக்க வெண்டும் என்பது திட்டமாகும். ஆனால் குறித்த பாடல் மாலை ஆறு மணிக்கே ஒலி பரப்பானதும் கதிர்காமம் பகுதியில் உள்ள வெல்லெச என்ற இடத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்று மட்டும் மாலை ஆறு மணியளவில் தாக்குதலுக்குள்ளானது. இந்நேரத்தில் வேறு காவல் நிலையம் ஏதும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை இதற்கான காரணம் நடு இரவு ஒலிப்பரப்புவது எனத் திட்டமிட்டிருந்த பாடல் மாலையே தவறாக ஒலிபரப்பப்பட்டு விட்டதே எனக் கூறப்படுகிறது.
இத்தாக்குதல் நிகழ்வு இயக்கத்தின் பிற பகுதியினர்களுக்குச் சென்றடையாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இத்தாக்குதல் மூலம் காவல்துறை விழித்துக் கொண்டு நாட்டில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களையும் உசார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியது.மறுபடியும் அதே பாடல் ஏற்கனவே திட்டமிட்டிருந்த அதே நேரத்தில் ஒலிபரப்பானது. தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பாடல் ஒலிபரப்பானதும் காவல் நிலையங்கள் உறக்கத்திலிருக்கும் என எண்ணித் தாக்குதல் நடத்த சென்றவர்களுக்குச் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பதில் தாக்குதல் இருந்தது
சில இடங்களில் தாக்கச் சென்றவர்களில் சிலர் கொல்லப்பட்டனர்.சில காவல் நிலையங்கள் தாக்குதலுக்கும் உள்ளாகின.சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன.அப்படியான ஒரு பகுதிதான் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள டெனியாய என்ற இடமாகும். இப்பகுதிக்குள் இலங்கை இராணுவம் தரை வழியாகச் செல்ல முடியாத வகையில் தடைகளை இட்டிருந்தார்கள். இறுதியில் இந்திய விமானப்படையின் உதவியுடன் பத்தொன்பது நாள்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்; ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அதன்பின் இந்த இயக்கத்தின் நிலை என்ன ஆனது ?
இந்த இயக்கம் அத்தோடு முடங்கிப் போகவில்லை.மீண்டும் 1980களில் மிக எழுச்சியடு எழத் தொடங்கியது.எனினும் மலையக மக்களுக்கெதிரான இனவாதத்தை அது கைவிடவில்லை.அத்தோடு வடக்கில் ஆயுதப் போராட்டத்தை நடத்தும் இயக்கங்களின் ஈழக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவுமில்லை. அதே நேரம் எண்பதுகளில் முன் வைத்த ஒரே நாள் தாக்குதல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற திட்டம் கை விடப்பட்டது.
மீண்டும் இவ்வியக்கம் தாக்குதலைத் தொடுத்த பொழுது அதனை அடக்க அரசு என்ன வழிமுறையைக் கையாண்டது ?
வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதம் ஏந்திய அமைப்புகளின் தாக்குதல்களையும் தென்பகுதிகளில் சனத்தா விமுக்தி இயக்கம் அரசு படைகளுக்கெதிராக நடத்தும் தாக்குதல்களையும் ஒரே சமயத்தில் எதிர் கொள்வது அரசுக்கு மிகக் கடினமானதாக இருந்தது.இராணுவம்,காவல் துறைகளில் இந்த இயக்கத்தின் ஆதரவு ஆற்றல்கள் இருப்பதாகப் பேசப்பட்டன .இந்நிலையைச் சரியாகக் கையாளாவிட்டால் இரு ஆயுதம் ஏந்திய அமைப்புகளும் தங்களின் இலக்கை அடையும் நிலை உருவாகும் என்பதை அன்றைய இலங்கைக் குடியரசுத் தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அவர்கள் நன்கு அறிந்திருந்திருக்க வேண்டும்.இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் “கிழட்டுநரி” என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவை வர்ணித்திருந்தார். அந்தக் கிழட்டு நரி விரித்த வலை வெற்றி அளித்தது.1987இல் இரு நாட்டுத் தலைவர்களும் அன்று செய்து கொண்ட உடன்படிக்கையின்படி சிங்கள அரசுப் படைகள் அனைத்தும் தென்பகுதிக்கு நகர்த்தப்பட்டன. இதன் மூலம் சனத்தா விமுக்தி பெரமுனாவின் தாக்குதலை அரசு எளிதில் முறியடித்தது. இவ்வியக்கத்தின் தலைவர் ரோகன விஜய வீரா உட்படப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்,பெண்கள் கொடூரமான நிலையில் அரசுப் படைகளால் கொலை செய்யப்பட்டார்கள்.
வடகிழக்குப் பகுதிகளை இந்திய அமைதிப்படை பார்த்துக் கொண்டது. தென்பகுதியை இலங்கைப் படை பார்ததுக் கொண்டது. ஜெயவர்த்தனா அவர்களின் நோக்கம் முழுமையாக நிறைவேறியது. 1971ஆம் காலப்பகுதிகளின் நிகழ்வுகளும் 1987 காலப் பகுதி நிகழ்வுகளும் சிங்களவர்கள் இடையில் இந்தியாவின் மீது நல்லெண்ணத்தை உருவாக்கி உள்ளதா என்ற வினா எதிர்காலத்திலும் தொடரலாம்.
இந்த இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு உள்ளது?
அரசின் கொலைவெறித் தாக்குதலுக்குத் தப்பியவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு நாடாளுமன்ற அரசியலுக்குத் திரும்பினார்கள். கடந்த தேர்தலிலும் அதற்கு முன் நடந்த தேர்தலிலும் சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களின் இனவாதச் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1972இல் தோட்டங்களைத் தேசியமயப்படுத்தவும்,அந்நிலங்களைச் சிங்கள மக்களுக்குப் பங்கீடு செய்து,அப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைச் செய்வதற்கும் இவ்வியக்கத்தின் அழுத்தமும் ஒரு காரணமாகும்.
1964ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கு எதிரான நிலையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு, தமிழரசுக் கட்சி, தமிழர்களை முன்னிலைப் படுத்தும் பிற கட்சிகள் என்பன முழுமையாக எதிர்க்காததற்கு என்ன காரணம்?
இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கை என்பது நாகரிக சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றன்று.பன்னாட்டுச் சட்ட விதி முறைகளை முழுமையாக மீறியிருக்கும் உடன்படிக்கை இதுவாகும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் தங்களது மூன்று நான்கு தலை முறையினரின் உழைப்பைக் கொட்டிக் கொடுத்தவர்கள் இம்மலையகத் தமிழ் மக்கள் ஆவர்; இரண்டு மூன்று தலை முறைகள் இம்மண்ணிலேயே பிறந்து வளர்ந்த வரலாற்றை கொண்டவர்களும் ஆவர்.எந்த ஒரு பொருள் சேமிப்பும் இல்லாதவர்கள் இவர்கள்; முன்னோர்களின் தாயக மண்ணைக் காணாதவர்கள்.
இம்மக்களின் விருப்பங்களைக் கணக்கில் எடுக்காமல் ஒரு பக்கச் சார்பாகச் செய்து கொண்ட உடன்படிக்கை என்பதால் எதிரான குரல்கள் வருமென்று அஞ்சி அரசு பின்வரும் அச்சுறுத்தலை அறிவித்தது:“இவ்வுடன்படிக்கையை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்படும்.”இந்த உடன்படிக்கைக்கு எதிராக வர வேண்ழய குரல்கள் அனைத்தும் அடங்கிப் போயின. இழப்பதற்கு எதுவும் இல்லாத பத்து இலக்கம் மக்கள் சொத்துடைமைத் தலைவர்களால் சந்தைப் பண்டங்களாக மாற்றப்பட்டார்கள்.
இந்த உடன்படிக்கையால் இம்மக்கள் அடைந்த பாதிப்புகள் என்னென்ன? நன்மைகள் என்னென்ன ?
இலங்கையின் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்க வேண்டிய இவர்கள் இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். குறித்த நிலப்பகுதியின் கால நிலையோடு ஒட்டி வளர்ந்தவர்கள் பிடுங்கி எறியப்பட்டார்கள்.இவர்களது உறவுகளும் துண்டாடப்பட்டன. பெற்றோர் ஒரு நாட்டில், பிள்ளைகள் ஒரு நாட்டில், இப்படி உறவுகளை இழந்த நிலை.இவர்கள் முன்னோர் வாழ்ந்த தமிழகமே முன்பின் அறியாத மண்ணாக இருந்த நிலையில் அங்கிருந்தும் இவர்கள் சிதறடிக்கப்பட்டு, கேரளம் கர்நாடகம் ஆந்திரா அந்தமான் போன்ற பல பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள்
மொத்தத்தில் முதலில் வந்த மூத்த தலைமுறை பட்ட துன்பங்கள் அதிகம். நாற்பதாண்டுக் காலத்தில் மூத்த தலைமுறையில் பெரும் பகுதியினர் இன்று இல்லை.அடுத்தடுத்து இம்மண்ணில் பிறந்தவர்கள் தங்களை இம்மண்ணோடு இணைத்துக் கொண்டார்கள். எனினும் இலங்கை மலையகப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் இருநூறு ஆண்டுக்கால வாழ்க்கையையும் தாயகம் திரும்பியவர்களின் நாற்பதாண்டுக்கால வாழ்க்கையையும் ஒப்பிட்டால் நாற்பதாண்டுக் கால வாழ்க்கை சற்று உயர்ந்ததென்றே கூறலாம். என்றாலும் பிற மாநிலங்களில் குடியேற்றப்பட்டவர்கள் தங்களின் மொழியை இழந்துள்ளார்கள்.தங்கள் உறவுகளை அவர்கள் தொடர்ந்து தக்கவைக்க இயலாமல் போனதையும் அறியலாம்.
பூர்வீகத் தமிழர் நிலப்பகுதிக்கும் மலையகத் தமிழர் வாழும் நிலப்பகுதிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
மலையகத் தமிழர்கள் வாழும் நிலப்பகுதி சிங்களக் கிராமங்களால் சூழப்ப்பட்டவையாகும். மத்திய மாகாணம் அதிகப்படியான தமிழர்கள் வாழும் பகுதியாகும். நுவரெலியா கண்டி போன்ற இடத்தில் இருந்து வடக்கு,கிழக்குத் தமிழர் பகுதி நூற்றறுபது மைல்கள் தொலைவைக் கொண்டதாகும்.பூர்வீக நிலப்பகுதியைச் சென்றடையச் சிங்களக் கிராமங்களையும் நகரங்களையும் கடந்தே செல்ல வெண்டும்.
இரண்டு சமூக மக்களுக்குமான உறவுகள் எவ்வாறாக இருந்தன ?
இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடியேறி நூறு ஆண்டுகள் ஆகியும் இவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. அன்றைய தமிழ்த் தலைவர்களின் பார்வையில் இவர்கள் இந்தியக் கூலிகளாக மட்டுமே தெரிந்தார்கள். 1920இல், அரசியல் களத்திற்கு இம்மக்கள் வருகை தரப் போகின்றார்கள் என்பதை அறிந்ததும் அரசியல் பிரதிநிதித்துவம் இவர்களுக்கு வழங்கக் கூடாது.என்று சிங்கள இனவாதிகள் இடையில் குரல் எழுந்தது. 1928இல் சட்ட சபையில் சர்வசன வாக்குரிமை தொடர்பாக நடந்த விவாதத்தில் இவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று டி. எஸ்.சேனநாயக்கா போன்றவர்கள் கூறிய பொழுது ஏ.ஈ.குணசிங்கா கடுமையாக எதிர்த்தார்.ஆனால் தமிழர்கள் இதை எதிர்த்ததாகத் தெரியவில்லை.அதேவேளை இலங்கையின் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாக அடையாளப் படுத்தப்படும் பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கெதிராக 1865ஆம் ஆண்டில் கொண்டு வந்து நடைமுறையில் இருந்த எசமானப் பணியாளர் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார். “ஏழையாகவும் அறிவற்றவனாகவும் உதவியற்றவனாகவும் இருக்கும் தொழிலாளி வேலைக்குச் சேர்ப்போரினதும் முதலாளிகளினதும் கொடுங்கோன்மையிலிருந்து தன்னைக் காப்பாற்ற முடியாமல் உள்ளான்” என்று ஆதங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1948இல் குடியுரிமைப் பறிப்புச் சட்டத்தின் போது சில தமிழர் தலைவர்களின் செயல்பாடுகள் இம்மக்களிடம் நெருடலை உருவாக்கின. பிரித்தானியர் ஆட்சியின் போது அரசுத் துறைகளில் பணியாற்றியவர்களில் பெரும் பகுதியானோர் பூர்வீகத் தமிழர்களாகும். இப்படிப் பணியாற்றியவர்களில் பெரும்பாலோர் அதிகார வர்க்கப் பார்வையோடு நடந்து கொண்டார்களே தவிர தமிழராய் அல்ல.1956&58இல் ஏற்பட்ட மொழிக் கலவரத்துக்குப் பின் இரு சமூகங்களின் நடுத்தர மட்டத்தில் படிப்படியான மாற்றங்கள் உருவாகின. தோட்டப்பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் பூர்வீகத் தமிழர்களே பெற்றுக் கொள்வதால் மலையகத்தில் படித்துவரும் இளைஞர்கள் இடையில் இவர்களுக்கெதிரான போக்குகள் அவ்வப்போது உருவாகி மறையும். ஆனால் 1970க்குப் பின் இரு பகுதியினரிடம் சுமுகமான உறவுகள் தொடரத் தொடங்கின.
பூர்வீகத் தமிழர் நிலப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் எந்தக் காலப்பகுதிகளில் இருந்து குடியேறத் தொடங்கினர்?
1956 காலங்களில் வவுனியா கிளிநொச்சி போன்ற இடங்களில் காடுகளை வெட்டி நிலங்களைப் பண்படுத்தும் பணிகள் தொடங்கிய பொழுது மலையகத்தில் வேலையற்று இருந்த இளைஞர்களை இப்பணிக்குப் பயன்படுத்த வடக்குத் தமிழர்கள் அழைத்து சென்றார்கள். அன்று முதல் மலையகத்தவர்கள் வடக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர்.1958இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்டதும் இனக்கலவரம் தொடங்கியது. இக்காலத்தில் மலையகப் பகுதிகளிலிருந்து சிலர் குடியேறத் தொடங்கினார்கள். 1977இல் சூலை 17ஆம் நாள் தமிழர்களுக் கெதிரான தாக்குதல் காவல்துறையினரின் துணையோடு நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதலில் மலையகப் பகுதிகளில் உள்ள நகரங்கள், தமிழர்கள் வாழ்ந்த கிராமங்கள்,தேயிலைத் தோட்டக் குடியிருப்புகள் ஆகியனவும் தாக்குதலுக்குள்ளாகின.இக்காலப் பகுதிகளில் தங்களின் எதிர்கால நன்மையையும் பாதுகாப்பையும் கருதி பலர் குடியேறினார்கள்.1982&83இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான தாக்குதலுக்குப் பின் வடக்கில் உள்ள தமிழர் தலைவர்களும் விடுதலை அமைப்புகளும் மலையகத் தமிழர்களை வட கிழக்கு நிலப் பகுதிகளில் குடியேறும்படிகோரிக்கை விடுத்தார்கள்எப்பொழுதும் இல்லாத அளவில் இக்காலப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மலையகத் தமிழர்கள் குடியேறினார்கள்.
ஈழ விடுதலைக் களத்தில் குடியேறியவர்களின் பங்களிப்பு எவ்வாறாக இருந்தது?
வடகிழக்கில் ஆயுதம் ஏந்திய அமைப்புகளின் தாக்குதல்கள் மலையக இளைஞர்களை 1980 காலங்களில் இருந்தே ஈர்த்தெடுக்க தொடங்கியதாகக் கூறப்படுகின்றதுஒருபுறம் அரசுப் படைகளின் ஒடுக்கு முறையும் கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்ட காலம்;மறுபுறம் ஈழ விடுதலை இயக்கத்தின் தாக்குதல்கள் தீவிரமடைந்த காலம்.இப்பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களின் உள்ள இளைஞர்களை விடுதலை இயக்கங்களும் அணி திரட்டினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.இப்போராட்டத்தில் மலையக இளைஞர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.
இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் மலையகத் தமிழர்கள் எவ்வாறான பாதிப்புகளை எதிர்ப்பட்டு வருகின்றார்கள்?
1977க்குப் பின் குடியேறியவர்கள் தங்களுக்கான சொந்த நிலங்களைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.ஒரு சிலர் தாங்கள் கொண்டு சென்ற பணத்தில் நிலத்தைப் பெற்றிருக்கலாம்.ஆனால் பெரும்பகுதியினர் விடுதலை இயக்கத்தின் துணையோடு நிலங்களில் குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இப்படிக் குடியமர்த்தப்பட்ட நிலங்கள் வடக்கில் உள்ள சிலருக்குச் சொந்தமானவையாகும்.இன அழிப்பு யுத்தத்தின்போது மலையகப்பகுதிகளில் இருந்து குடியேறிய பலர் அரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.எஞ்சியவர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு வதைபட்டார்கள்; வதைபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தாங்கள் குடியிருந்த நிலங்கள் தங்களுக்கு உரிமையுள்ளவை என்பதைக் காட்டும் சான்றுகள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை.அத்தோடு இந்நிலங்களின் உரிமையாளர்கள் தங்களின் நிலத்துக்கான சான்றுகளுடன் நிலங்களுக்குள் வந்திருப்பதால் இம்மக்கள் தாங்கள் குடியிருந்த நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மீண்டும் இவர்கள் புதிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளார்கள் என்பதை அறியலாம்.
Post A Comment: