நடிகர் டாம் க்ருஸ்
நடிகை ஆணாபெள்ளே வாலிஸ்
இயக்குனர் அலெக்ஸ் கர்ட்ஸ்மன்
இசை பிரையன் டைலர்
ஓளிப்பதிவு பெண் சேரேசின்
சுமார் 4000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவரின் மனைவி கருவுற்று ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். இதுபிடிக்காத அந்த மன்னனின் மகள், அந்த குழந்தையால் தனது அரியணை வாய்ப்பு போய்விடும் என்று பயந்து மன்னர், ராணி மற்றும் அவர்களது குழந்தையை கொன்று விடுகிறாள். மேலும் தீய சக்திகளை அவள் மீதே ஏவிவிட்டு, தீய சக்திகளின் ராணியாக வேண்டும் என்று எண்ணுகிறாள். தீய சக்திகளின் ராஜாவாக ஒருவரை தேர்வு செய்து, சிவப்பு கல் பதித்த கத்தி மூலமாக அவரை கொண்டு தீய சக்திகளின் ராஜாவாக்க முயற்சிக்கிறாள்.
இந்நிலையில், ராஜாவின் காவலாளிகள் அவளை உயிருடன் பிடித்து சவப் பெட்டியில் வைத்து மூடிவிடுகிறார்கள். அவள் மீண்டும் வெளியே வந்தால் தீய சக்திகளின் மூலம் அனைவருக்கும பாதிப்பு ஏற்படும் என்று அவளை மூடிய சவப் பெட்டியை, எகிப்தில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து வெளிவர முடியாதபடி செய்து விடுகின்றனர்.
அந்த ராணியின் உடலை கண்டுபிடிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியில் கைதேர்ந்தவளான நாயகி அனபெல்லே வாலிஸ் ஒரு மேப்பை வைத்துக் கொண்டு, மறைக்கப்பட்ட அந்த ராணியின் உடலை தேடி வருகிறார். மறுபுறத்தில் ராணுவப் பணியில் இருக்கும் டாம் குரூஸ் மற்றும் அவரது நண்பர் அந்த பகுதியில் ரகசிய பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அனபெல்லேவிடமும் தொடர்பில் இருக்கும் டாம் குரூஸ், அவளிடம் இருக்கும் அந்த மேப் ஒன்றை திருடிக் கொண்டு அந்த இடத்தில் புதையல் இருப்பதாக எண்ணி அதைக் கைப்பற்ற ஆசைப்பட்டு அங்கு செல்லும் போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதையடுத்து டாம் தனது ராணுவத்தின் உதவியை நாட ராணுவம் அங்கு விரைகிறது. அந்த இடத்தில் ஒரு ஏவுகணை குண்டையும் வீசுகிறது. இதில் குண்டுவிழுந்த இடத்தில் அந்த உடலை மறைத்து வைத்திருக்கும் சுரங்கப்பாதையும் வெளிப்படுகிறது. அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த நாயகி, நாயகன் மற்றும் ராணுவ உதவியுடன் அந்த உடலை லண்டனுக்கு கொண்டு செல்கிறாள். ஆனால் செல்லும் வழியிலேயே தீய சக்தியின் செயலால் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிறது.
இதில் அனபெல்லேவை டாம் குரூஸ் காப்பாற்றிவிடுகிறார். அதேநேரத்தில் அவர் விபத்தில் சிக்கிவிடுகிறார். அவரை அந்த தீயசக்தி காப்பாற்றி இருப்பதும், அந்த உடலை கண்டுபிடிக்க உத்தரவிட்ட ரஸல் குரோ மூலமாக தெரியவருகிறது. டாமை தீயசக்திகளின் ராஜாவாக்க முடிவு செய்து, அவரை பழி கொடுக்க நினைக்கிறது.
இந்நிலையில், அந்த தீயசக்தியான சோபியாவின் பிடியில் இருந்து டாம் தப்பித்தாரா? அவரது நண்பனையும், நாயகியையும் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
டாம் குரூஸ் தனக்கே உரித்தான ஸ்டைலில் பட்டையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாம் நடிப்பில் கலக்கியிருந்தாலும், அவருக்கான கெத்து குறைச்சலே.
அனபெல்லே வாலிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கே கருவான சோபியா பெளடெல்லா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ஒரு ராணிக்கு உண்டான கெத்து, தீயசக்திகளுக்கு உண்டான சூட்சமம் உள்ளிட்டவற்றுடன் கலக்கி இருக்கிறார். மற்றபடி ஜேக் ஜான்சன், கோர்ட்னி பி வேன்ஸ், ரஸல் க்ரோ காட்சிகளுக்கு பக்கபலமாக வந்து செல்கின்றனர்.
அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், தெளிவாக இல்லை. காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு உண்டான தரம் குறைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களும் அதிகமாக இல்லாதது படத்திற்கு மைனஸ்.
ப்ரெயன் டைலரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பென் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், தெளிவாக இல்லை.
மொத்தத்தில் `தி மம்மி' ஸ்வாரஸ்யம் கம்மி.
Post A Comment: