தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த சரத்துகளை அமுல்படுத்துவதில், சில தோட்டக் கம்பனிகள் அலட்சியமாக நடந்துகொள்வதால், தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்படுகின்றனர்.
இதனால், சர்வதேச தொழிற்சட்டங்கள் மீறப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளை, சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் கண்டிக்க வேண்டும்” என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 106ஆவது வருடாந்த மாநாட்டில், இ.தொ.காவின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
“கூட்டொப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, 140 ரூபாய் உற்பத்திக் கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்காக, பலவிதமான உபாயங்களை கம்பனிகள் கையாளுகின்றன. குறிப்பிட்டளவு கொழுந்தை பறித்தால் மட்டுமே, உற்பத்தித்திறன் கொடுப்பனவை வழங்க முடியும் என்று, தோட்ட நிர்வாகங்கள் கூறுவதன்மூலம், ஒப்பந்தச்சரத்து மீறப்படுகின்றது. அத்துடன், தோட்டங்கள் கைமாற்றப்படும்போது, அது தொடர்பிலான விவரங்கள், தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.
“இதனால், தொழிலாளர்கள், ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற கொடுப்பனவுகளை பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சர்வதேச தொழிற்சட்ட ஒப்பந்தங்களை மதிக்காது, தோட்டக் கம்பனிகள் நடந்துகொள்வதால், தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதோடு, ஒடுக்குமுறை வழிதோன்றுகின்றது
“சர்வதேச தொழில் ஸ்தாபனம், 1919 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, தொழிலாளர் நன்மைக்காக எடுத்துவரும் முயற்சிகள் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக, விசேடமாக சி 87 மற்றும் சி 98 என்ற இரண்டு சர்வதேச தொழிற்சட்ட ஒப்பந்தங்களை, முறையாக உலக நாடுகள் அனைத்திலும் அமுல்படுத்த, ஸ்திர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சட்டங்களை கடினமாக அமுல்படுத்துவதற்கு, விசேட திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டில், ‘அடிப்படை நியதிகளும் தொழில் உரிமைகளும்’, ‘தொழில் வாய்ப்புகளும் நியாயமான தொழில் முறைகளும்’ மற்றும் ‘தொழில் இடமாற்றம்’ ஆகியவை தொடர்பில், மூன்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தப் பிரேரணைகளுக்கூடாக, எதிர்வரும் காலங்களில் ‘தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள்’, ‘தொழிற்சங்க உரிமைகள்’ போன்ற பல நன்மைகளை தொழிலாளர் வர்க்கம் அடைய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Post A Comment: