Propellerads
Navigation

நகர்வலம்

நடிகர்:பாலாஜி
நடிகை: தீக்ஷிதா
இயக்குனர்: மார்க்ஸ்
இசை: பவன் கார்த்திக்
ஓளிப்பதிவு: தமிழ் தென்றல் ஆர்

சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார்கள் நாயகன் பாலாஜி பாலகிருஷ்ணன் மற்றும் யோகி பாபு. பாலாஜிக்கு ஒத்தாசையாக பால சரவணன் வருகிறார். யோகி பாபு தண்ணீர் சப்ளை செய்யும் பகுதியில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியான நாயகி தீக்‌ஷிதா மாணிக்கம், ஒரு இசை பிரியர். அதுவும் இளையராஜா பாடல்கள் என்றால் தீக்‌ஷிதாவுக்கு உயிர். ஒருநாள் அவசர வேலையாக யோகி பாபு வெளியூர் செல்ல, தனது லாரியை எடுத்துக் கொண்டு தீக்‌ஷிதா இருக்கும் குடியிறுப்புக்கு தண்ணீர் சப்ளை செய்ய வருகிறார் பாலாஜி.

அப்போது, தனது லாரியில் இளையராஜா பாடல்களை போடுகிறார். அங்கு தீக்‌ஷிதாவை பார்த்த பாலாஜிக்கு அவள் மீது ஈர்ப்பு வர தினமும் அதே பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்ய வருகிறார். தினமும் இளையராஜா பாடல்களையே போடுவதால் பாலாஜி மீது தீக்ஷிதாவுக்கு காதல் ஏற்படுகிறது. இதையடுத்து தனது கல்லூரி படிப்பை தொடங்கும் தீக்ஷிதா ஒருகட்டத்தில் தனது காதலை பாலாஜியிடம் கூற, அவரும் நாயகியை காதலிப்பதாக கூறுகிறார்.

இந்நிலையில், இவர்களது காதல் தீக்‌ஷிதாவின் வீட்டிற்கு தெரியவர, தீக்‌ஷிதாவின் தந்தையான மாரிமுத்து, அரசியல்வாதி சித்தப்பாவான ரவி மற்றும் அண்ணன் முத்துக்குமார் தீக்‌ஷிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் பாலாஜி தங்களது பிரிவை சேர்ந்தவன் இல்லை என்பதால் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய சொல்லி மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய மறுக்கும் பாலாஜியை கொலை செய்ய சித்தப்பா ரவி முடிவு செய்கிறார். அதற்காக முத்துக்குமாரை அனுப்புகிறார்.

தனது சித்தப்பா சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை அப்படியே செய்யும் முத்துக்குமார், தனது அடியாளான `அஞ்சாதே' ஸ்ரீதருடன் சேர்ந்து பாலாஜியை கொன்றாரா? அல்லது தனது தங்கையுடன் பாலாஜியை சேர்த்து வைத்தாரா? தீக்‌ஷிதா என்ன ஆனார்? இறுதியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

பாலாஜி ஒரு லாரி டிரைவராக நடித்திருக்கிறார். `காதல் சொல்ல வந்தேன்' படத்தில் அமைந்தது போல ரசிக்கும் படியான, கவரும்படியான கதாபாத்திரம் அவருக்கு இப்படத்தில் அமையவில்லை. நாயகியை கவரும்படியாக எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. மாறாக இளையராஜா பாடலை போட்டே நாயகியை காதல் வலையில் விழ வைக்கிறார்.

பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் தீக்‌ஷிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இளையராஜாவின் ரசிகையாக அழகாக நடித்திருக்கிறார். யோகி பாபு எப்போதும் போல, இப்படத்திலும் தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைக்கிறார். இப்படத்தில் தமிழ் உச்சரிப்பு சரியாக வராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். பால சரவணன் தனக்கே உரித்தான ஸ்டைலில் கலாய்த்து ரசிக்க வைக்கிறார். அவரும் யோகி பாபுவும் வரும் காட்சிகளை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. யோகி பாபுவை கலாய்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலா, அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

முத்துக்குமார் நாயகியின் அண்ணனாகவும், வில்லனாகவும் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கைக்கு பொறுப்பான அண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் வில்லனாக வந்தாலும், இரண்டாவது பாதியில் தனது தங்கையின் மீது உள்ள பாசத்தில் பொறுப்பான முடிவை எடுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். `அஞ்சாதே' ஸ்ரீதருக்கு ஒரு சாதாரண கதாபாத்திரம் என்றாலும், படத்திற்கு திருப்புமுனையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இயக்குநர் மார்க்ஸ், லாரி ஒட்டுநருக்கும் - மாணவிக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். முத்துக்குமாரின் கதாபாத்திரத்தை சிறப்பாக அமைத்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும், தேவையான முக்கியத்துவத்தை அளித்த இயக்குநர், நாயகன் கதாபாத்திரத்திற்கு மெனக்கிடவில்லை என்று தான் செல்ல வேண்டும். அதுவே படத்திற்கு பலவீனத்தை அளிக்கிறது.

படத்தில் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும், பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களும், இசையும் வருவதால் பவண் கார்த்திக்கின் இசை சற்று எடுபடவில்லை. மற்றபடி படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி இருந்தது. ஆர். தமிழ் தென்றலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் `நகர்வலம்' வேகமில்லை.


Share
Banner

Post A Comment: