கடந்த சில வருடங்களாக தமிழ் படங்கள் தொடங்கும்போது ஒரு டைட்டிலும் பின்னர் வரிச்சலுகைக்காக இன்னொரு டைட்டிலும் வைக்கப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 'மாஸ்' முதல் 'பவர்பாண்டி' வரை இதற்கு உதாரணமாக பல திரைப்படங்களை கூறலாம். இதற்கு ஒரே காரணம் தமிழக அரசு தரும் 30% வரிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இனிமேல் இஷ்டம் போல் இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு டைட்டில் வைத்து கொள்ளலாம். ஏனெனில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகை ரத்து ஆகிறது.
மத்திய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரிமுறையை அறிமுகம் செய்தது. வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வழங்கி வந்த வரி சலுகை ரத்தாகிறது.
தற்போது கேளிக்கை வரியாக சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் 30 சதவீதமும், இதர பகுதிகளுக்கு 15-20 சதவீதம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இனிமேல் நாடு முழுவதும் கேளிக்கை வரியாக அரசுக்கு 12 முதல் 18 சதவீதம் வரி கட்டினால் போதும் என்ற நிலை ஜிஎஸ்டிஆல் வரவிருக்கின்றது. ஜிஎஸ்டி முறையில் வரிவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் கேளிக்கை வரிவிலக்கு இனி நடைமுறையில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: