வாழ்க்கை வரலாற்று கதைகளை படம் எடுப்பதுதான் இப்போது பாலிவுட் டிரண்ட். அந்த வகையில் தற்போது போதி தர்மரின் வாழ்க்கையை பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். போதி தர்மர் பற்றிய ஒரு அறிமுகம்...
போதி தர்மர் கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்லவ மன்னன் நாகேந்திர பல்லவனின் 3வது மகன். முதல் மகன் மன்னனாவும், இரண்டாவது மகன் தளபதியாகவும் ஆன பிறகு போதி தர்மனை அமைச்சராக பதவியேற்க சொன்னார்கள்.
ஆனால் புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதி தர்மன் அரச வாழ்க்கை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் நடை பயணமாகவே சீனாவுக்கு சென்ற போதி தர்மன் தமிழ்நாட்டின் தற்காப்பு கலையை மாற்றம் செய்து ஷாலின் குங்பூவாக அங்கு கற்றுக் கொடுத்தார். சீனாவில் தீராத நோயாக இருந்த அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார். போதி தர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. அவரை போதி தர்மர் என்றும் சீன மக்களை காப்பாற்றிய வீரத் துறவி என்றும் அவர் திராவிட நாட்டை சேர்ந்தவர் என்றும் சீன வரலாறு குறிப்பிடுகிறது.
போதி தர்மனின் வாழ்க்கையை ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கிய 7ம் அறிவு படத்தில் சிறிய அளவில் பயன்படுத்தினார். இதில் சூர்யா போதி தர்மனாக நடித்தார். இப்போது போதி தர்மனின் முழு வாழ்க்கையையும் இந்தியில் தயாரிக்க இருக்கிறார்கள். பிரபல இந்தி இயக்குனர் ராம் மத்வானி, இந்தி பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து இயக்க இருக்கிறார்.
இதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இயக்குனர் ராம் மத்வானி சீனாவில் போதி தர்மர் வாழ்ந்த இடத்துக்கு சென்று பார்த்து வந்திருக்கிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. (அருகில் உள்ள படம்: சீனாவில் உள்ள போதி தர்மர் சிலை)
Post A Comment: