இந்தியத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக, ஏன், உலகத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாகக் கூட என்று சொல்லலாம். ஒரு படத்தின் டீசர் அந்தப் படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று சொல்லாமலே வெளியாவது இதுதான் முதல் முறை. அதிலும் கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருப்பது சரியா?. கௌதம் மேனன் இயக்க தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டீசர் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ஆனால், படத்தின் டீசரில் இசையமைப்பாளர் பெயர் யார் என்று குறிப்பிடப்படவில்லை.
பொதுவாக கௌதம் மேனன் படம் என்றாலே இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். கௌதம் மேனன் - இளையராஜா இணைந்த 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்கள் கூட ஹிட்டானவைதான். ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடனே அதிகம் இணையும் கௌதம் மேனன் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டீசருக்கு யாரை இசையமைக்க வைத்துள்ளார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. ஒரு வேளை டீசருக்கு மட்டும் என தனி இசையமைப்பாளரைப் பயன்படுத்தியுள்ளாரோ என்று யோசிக்க வைக்கிறது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைக்கப் போகிறார் என தனுஷிடம் கௌதம் மேனன் சொன்னதாகவும், ஆனால், ரகுமான் இன்னும் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனிடையே, இந்தப் படத்திற்கு யுவன்ஷங்கர ராஜா இசையமைக்கிறார் என்றும் ஒரு தகவல் உள்ளது.
இருந்தாலும் அனைத்தையும் மீறி இந்த டீசர் வெளியாகியுள்ள யு டியூப்பில் ரசிகர்கள் யார் இசையமைப்பாளர் என்பது குறித்து தாறுமாறாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள. அது படத்திற்கும் நல்லதல்ல என்பதை படக்குழுவினர் உணர்ந்தால் சரி. எனவே, உடனடியாக யார் படத்தின் இசையமைப்பாளர் என்பதை அவர்கள் அறிவிப்பது அவர்களது படத்திற்கே நல்லது.
Post A Comment: