நாகர்கோவிலை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தொடர்ந்த் வழக்கில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து கலைப்புலி தாணு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.தாணு கூறியதாவது: இது ஒரு பொய்யான வழக்கு. நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கித் திரையிட்டவருக்கும் இந்த தியேட்டர் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில், தேவையில்லாமல் என் பெயரை இழுத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த தியேட்டர் உரிமையாளரிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
எந்த வகையிலும் சம்பந்தமில்லாத என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்த தியேட்டர்காரர். அவரிடம் ரூ 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நிலையிலா நான் இருக்கிறேன்? இந்தப் பிரச்சினை இன்று முடிந்துவிடும்' என்று கூறியுள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு சினிமாக்காரர்கள் மட்டுமின்றி பலருக்கு கோடிக்கணக்கில் பண உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கும், அன்னதான நிகழ்ச்சி போன்ற சேவைகளுக்கு பெரும் பொருள் உதவி செய்துள்ளார். அப்படிப்பட்ட தாணு ரூ.2 லட்சத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்திருப்பது அபாண்டமானது என்று இந்த வழக்கு குறித்து திரையுலகினர் கருத்து கூறியுள்ளனர்.

Post A Comment: