விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சேதுபதி. இந்தப்படத்தின் புரமோஷனுக்காக 'டைமிங்காக' ஒரு விஷயத்தை எடுத்துவிட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதை மனதில் வைத்து, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்ல, விஜய் - அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் சண்டைப்போட்டுக் கொள்வதையும் சாடியுள்ளார்.
"சினிமா நடிகர்களுக்காக இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது. ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சண்டையிட்டு கொள்வதைப் பார்க்கிறேன். அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆர்வத்தில் ஓரளவையாவது அரசியலில் செலுத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். முடிந்த அளவுக்கு அனைவருமே ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராகவாவது இருக்க வேண்டும்.”
என்று கருத்து தெரிவித்துள்ள விஜய்சேதுபதி, “18 வயதைக் கடந்த இளைஞர்கள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். கட்சியில் உறுப்பினராக இருக்கும்போது இளைஞர்கள் தேடித் தேடி தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்." என்றும் தன்னுடைய அபிப்ராயத்தை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் இப்படி பேசியதை வைத்து, விஜய் சேதுபதி அரசியலுக்கு வருவாரா.... எந்தக்கட்சியில் சேரப்போகிறார்? அல்லது அவரே கட்சி ஆரம்பிக்கப்போகிறாரா? அல்லது ஊருக்குத்தான் உபதேசமா? என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் விஜய்சேதுபதியை ஓட்ட ஆரம்பித்துவிட்டனர்.

Post A Comment: