Propellerads
Navigation

சென்னையில் 13-வது சர்வதேச திரைப்பட விழா: 184 படங்கள் திரையிடப்படுகின்றன

சென்னை சர்வதேச திரைப்பட விழா தலைவர் தங்கராஜ், நடிகர் மனோபாலா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

சென்னையில் 13-வது சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

‘ஆஸ்கார்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 16 படங்களும், ‘கேன்ஸ்’, பெர்லின்’ சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படங்களும் திரையிடப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 120 படங்கள் திரையிடப்படும். இந்த திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவுக்கான போட்டிகள் பிரிவில், ‘36 வயதினிலே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, சார்லஸ் சப்ஜிக் கார்த்திகா, கிருமி, கதிரவனின் கோடை மழை, மாயா, ஆரஞ்சு மிட்டாய், ஒட்ட தூதுவன், பிசாசு, ரேடியோ பெட்டி, டாக்க டாக்க, தனி ஒருவன் ஆகிய 12 படங்கள் திரையிடப்படுகின்றன.

மறைந்த கே.பாலசந்தர், மனோரமா ஆகியோர் நினைவாக, ‘அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, ஒரு வீடு இரு வாசல், உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி, மேஜர் சந்திரகாந்த், அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய படங்கள் திரையிடப்படும். உட்லண்ட்ஸ் தியேட்டர் வளாகம், ஐநாக்ஸ் தியேட்டர், காசினோ தியேட்டர், ஆர்.கே.வி.ஸ்டூடியோ, ரஷிய கலாசார மையம் ஆகியவற்றில் இந்த படங்கள் திரையிடப்படும்.

தமிழக அரசின் ஆதரவோடு இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாள் படவிழாவிலும் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது, நடிகர்கள் மோகன், ரமணா, ஹேமச்சந்திரன், நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், லிசி, சோனியா ஆகியோர் உடன் இருந்தனர்.

Share
Banner

Post A Comment: