அறிமுக நடிகர் சிற்பி மாதேஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சாந்தன்’. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தை சாம்ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். சுகுமார், காஷிஹா, மது, பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ரவிப்ரியன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று சென்னை அபிராமி மெகா மாலில் எளிமையாக நடைபெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், அபிராமி திரையரங்கில் ஒரு காட்சியை நிறுத்திவிட்டு, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஒரு அரங்கை இலவசமாக வழங்கியுள்ளார் அபிராமி ராமநாதன்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனரும் நடிகருமான எஸ்.வி.சேகர், ஜாக்குவார் தங்கம், பாடலாசிரியர் சினேகன், பாடகர் கானா பாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இதில் எஸ்.வி.சேகர் இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, குறைந்த முதலீட்டில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று திட்டமிட்டு, அதை அந்த பட்ஜெட்டுக்குள் எடுத்து முடிப்பது என்பது கஷ்டமான ஒன்று. அதை இந்த படக்குழு திறமையாக செய்து முடித்துள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறவர்கள், தங்கள் படங்களை சென்சார் போர்டு கவனிப்பதில்லை. ரொம்பம் காலதாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
நான் சென்சார் போர்டின் உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சென்சார் போர்டுக்கு வரும் படங்களை நாங்கள் வரிசைப்படித்தான் சென்சார் செய்கின்றோம். ஆனால், படத்தை நீங்கள் எடுத்து வந்தவுடனேயே சென்சார் செய்து முடிக்கவேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
உங்களுக்கு யு சான்றிதழ்தான் வேண்டுமென்றால் அதற்காக சில காட்சிகளை கட் செய்ய வேண்டியதிருக்கும். இதுமாதிரியான சில வேலைகளெல்லாம் இருப்பதால் கண்டிப்பாக சென்சார் போர்டில் ஒரு படத்திற்கு சான்றிதழ் தர தாமதம் ஆகத்தான் செய்யும். எனவே, சென்சார் போர்டுக்கு படத்தை கொண்டு வருபவர்கள், படத்திற்கான சான்றிதழ் கிடைக்க ஒரு மாத காலம் ஆகும் என்ற மனநிலையோடு வாருங்கள் என்று அறிவுரை கூறினார்.


Post A Comment: