திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயமானது. ஏற்கனவே இருவருக்கும் காதல் இருந்தது. தனி விமானத்தில் வெளியூர்களில் எல்லாம் சுற்றி வந்தார்கள். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இரு வீட்டு பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்துதான் நிச்சயதார்த்தம் நடந்தது.
இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டார்கள். இந்த வருடம் இறுதியில் முகூர்த்தத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். திருமணத்துக்கு பிறகு திரிஷா தொடர்ந்து நடிக்க விரும்பியதாகவும் வருண்மணியன் தரப்பில் நடிக்க தடை விதித்ததாகவும் எனவேதான் திருமணம் ரத்தானது என்றும் கூறப்பட்டது. குடும்பத்தில் உள்ள சில பெரியவர்களால்தான் திருமணம் நின்றதாக திரிஷாவின் தாய் உமா கூறினார். திரிஷா இதுவரை இந்த விவகாரம் குறித்து பதில் சொல்லாமல் இருந்தார். தற்போது முதல் தடவையாக திருமணம் நின்றது பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–
எனது திருமணம் ரத்தானது உண்மைதான். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. சில விஷயங்கள் நம்மையும் மீறி நடந்து விடுகின்றன. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். திருமணம் நின்றது பற்றி நான் கவலைப்படவில்லை. அது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கவும் விரும்பவில்லை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். தற்போது எனது முழு சிந்தனையும் சினிமாவில்தான் இருக்கிறது.
வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் கடவுள் விருப்பப்படியே நடக்கின்றன. எனக்கு நல்லா விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய குணம் உண்டு. என் வாழ்க்கையில் எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். நான் கடவுளின் குழந்தை. கடவுள் என்னை கவனித்துக் கொள்வார்.
இவ்வாறு திரிஷா கூறினார்.


Post A Comment: