
வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியிடம் அந்த படத்தின் இணை இயக்குனர் லெனின் ஒரு கதையை சொன்னாராம். அந்த கதையை கேட்டு அசந்து போன விஜய்சேதுபதி சினிமாவில் நான் பெரிய ஆளானால் கண்டிப்பாக இந்த படத்தை நானே தயாரிக்கின்றேன்' என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
சினிமாவுலகை பொருத்தவரையில் வாக்குறுதி என்பது தண்ணீரில் எழுதிய எழுத்து என்பதுதான் நடைமுறை. ஆனால் விஜய்சேதுபதி பல வருடங்களுக்கு முன் லெனினுக்கு கொடுத்த வாக்குறுதியை தற்போது காப்பாற்றியுள்ளார். அந்த படம் தான் விஜய் சேதுபதி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை'. அதுமட்டுமின்றி 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் தன்னுடன் சிறு கேரக்டரில் நடித்த ஆண்டனி தான் ஹீரோ என்று இயக்குனர் லெனின் கூறியபோது அதை மறுக்காமல் ஏற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆண்டனிக்கு ஜோடியாக காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
Post A Comment: