Propellerads
Navigation

வெருளி

நடிகர்    அபிஷேக்
நடிகை    அர்ச்சனா சிங்
இயக்குனர்    அமுதவாணன் பி
இசை    தினேஷ் ராஜா வி எம்
ஓளிப்பதிவு    சிவா பிரபு

படத்தின் ஆரம்பத்திலேயே மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சில பேர் உயிரிழக்கிறார்கள். சில பேர் காயத்துடன் உயிர் தப்பிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான நாயகன் அபிஷேக் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் பொருட்களையெல்லாம் சேகரிக்கும்போது ஒரு எந்திர தகடும் கிடைக்கிறது. அதையெல்லாம் எடுத்து காவல் நிலையத்தில் அபிஷேக் வைக்கச் சொல்கிறார்.

இந்நிலையில், இரவு ரோந்து பணியின்போது ஒரு தம்பதியிடம் மர்ம நபர் ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சிக்கிறார். அப்போது, அவர்களை அபிஷேக், தம்பதியரை அந்த மர்ம நபரிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த இடத்திலும் அபிஷேக்குக்கு ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. மினி பஸ் விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த எந்திர தகடும், வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த எந்திர தகடும் ஒன்றையொன்று ஒத்துப்போகிறது.

நடந்த சம்பவங்களுக்கும் அந்த தகட்டுக்கும் ஏதாவதும் சம்பந்தம் இருக்குமா? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், டிவி ரிப்போர்ட்டரான நாயகி அர்ச்சனா சிங் இந்த தகவலை அறிந்துகொண்டு அவளும் இதுகுறித்த விசாரணையில் களமிறங்குகிறாள். இதன்பின்னர், ஒரு விபத்தில் குழந்தை இறக்க, அந்த இடத்திலும் ஒரு எந்திர தகடு கிடைக்கிறது.

அந்த தகடுக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை அப்போதுதான் அபிஷேக் உறுதிபடுத்துகிறார். உண்மையில் அந்த தகடுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதெல்லாம் எதற்காக நடக்கிறது? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அபிஷேக் போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். விசாரணை செய்யும் விதம், மற்றவர்களிடம் பேசும் விதம் எல்லாமே அருமையாக இருக்கிறது. ரிப்போர்ட்டராக வரும் நாயகி அர்ச்சனா சிங், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

பிற்பாதியில் வரும் பாக்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படததிற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாசம், செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். அவருடைய மகனாக நடித்திருக்கும் அசோக் பாண்டியனும் தனது பங்குக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராணுவ அதிகாரியாக வரும் ரவி பிரகாஷ், அபிஷேக்குக்கு உதவி செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் அமுதவாணன், திரில்லர் கதையில் சமூக அக்கறையுடன் ஒரு கருத்தையும் படத்தில் சொல்ல வந்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் காரணம் என்னவென்று விசாரணை செய்ய ஆரம்பிக்கும் நிலையிலிருந்து படம் வேகமெடுக்கிறது. படத்திற்கு விளம்பரம் இல்லாததுதான் இப்படத்தை பற்றிய பேச்சு பெரிய அளவில் இல்லாமல் போயிற்று. படத்திற்கு நன்றாக விளம்பரப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக அனைவரிடத்திலும் இப்படம் நல்ல மதிப்பை பெற்றிருக்கும்.

ராஜ் பிரதாப், தினேஷ் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள். சிவா பிரபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வெருளி’ வெறுக்கவில்லை.  
Share
Banner

Post A Comment: