Propellerads
Navigation

எங்க அம்மா ராணி

நடிகர்: சங்கர் ஸ்ரீ ஹரி
நடிகை: தன்ஷிகா
இயக்குனர்: பானி எஸ்
இசை: இளையராஜா
ஓளிப்பதிவு: குமரன்


மலேசியாவில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தன்ஷிகாவின் ஒரு குழந்தை திடீரென மயக்கமடைந்து கீழே விழ, அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அன்று இரவே அந்த குழந்தை இறந்து போகிறது.

தன்னுடைய கவனிப்பில்லாமல்தான் அவள் இறந்துவிட்டாள் என்ற குற்ற உணர்வுடன் இருக்கும் டாக்டரான சங்கர் அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டறிய முற்படுகிறார். அப்போது, அந்த குழந்தை வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுதான் இறந்துபோனாள் என்று கண்டுபிடிக்கிறார். அந்த குழந்தைகள் இரட்டையர்கள் என்பதால் மற்றொரு பெண்ணுக்கும் அந்த நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில், அந்த பெண்ணையும் அவர் சோதிக்கிறார்.

பரிசோதனையில் அந்த பெண்ணுக்கும் வினோதமான நோய் தாக்கியிருப்பது தெரிய வருகிறது. ஒருபக்கம் தனது கணவரை தேடும் பணியிலும், மறுமுனையில் தன்னுடைய மகளை அந்த நோயிலிருந்து காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் தன்ஷிகா.

இறுதியில், தனது கணவரை தன்ஷிகா தேடிக்கண்டுபிடித்தாரா? தன்னுடைய மற்றொரு பெண்ணையாவது காப்பாற்றினாரா? தன்னுடைய பெண்ணுக்கு வந்துள்ள அந்த விநோதமான நோய்க்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தன்ஷிகா முதலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அவரை பாராட்டலாம். இருப்பினும், தனது குழந்தையை காப்பாற்ற நினைக்கும் பரிதவிப்பு, தனது கணவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் துடிதுடிப்பு இவற்றில் எல்லாம் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிக்கலாமோ என்று தோன்றுகிறது. மற்றபடி, ஒருசில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

தன்ஷிகாவின் குழந்தைகளாக வரும் வர்ணிகா, வர்ஷா இருவரும் இந்த படத்திற்குண்டான தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். நமோ நாராயணா சொக்கு என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைக்கிறார். இவருக்கு ஒருசில காட்சிகள் என்றாலும் தனது நடிப்பில் நிறைவை கொடுத்திருக்கிறார். டாக்டராக வரும் சங்கர்ஸ்ரீ ஹரி புதுமுகம் என்றாலும் அவருடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் பாணி படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. தன்ஷிகா தொலைந்துபோன தனது கணவரை ஒரு பக்கம் தேடுகிறார்? மற்றொரு பக்கம் தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்? இரண்டு பேரின் கதையையும் முழுதாக சொல்லாமல் அந்தரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். படம் பார்ப்பவர்களுக்கு படத்தில் என்ன கதை இருக்கிறது என்பதே புரியவில்லை. அதேபோல், அம்மா செண்டிமென்டும் பெரிதாக எடுபடவில்லை.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். அம்மாவை பற்றிய பாடலில் சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரின் ஒளிப்பதிவும் பெரிதாக ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் ‘எங்க அம்மா ராணி’ அழகில்லை.
Share
Banner

Post A Comment: