Propellerads
Navigation

எய்தவன்

கலையரசன்
நடிகை சாத்னா டைட்டஸ்
இயக்குனர் சக்தி ராஜசேகரன்
இசை பார்த்வ பார்கோ
ஓளிப்பதிவு பிரேம்குமார் சி 

சென்னையில் தனது அப்பா வேல ராமமூர்த்தி, அம்மா, தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் கலையரசன். கலையரசனும் அவரது நண்பன் ராஜ்குமாரும் இணைந்து, பணம் எண்ணும் எந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றனர். சிறுவயது முதலே கலையரசனின் தங்கையை மருத்துவராக்க வேண்டும் என்று அவரது குடும்பமே ஊக்குவித்து வருகிறது. மறுபக்கம் கலையரசனின் முறைப் பெண்ணான நாயகி சாத்னா டைட்டஸ், போலீஸ் அதிகாரியாக வருகிறார். கலையரசனுடன் பேசுவதற்காகவும், அவருடன் பழகுவதற்காகவும், கலை வசிக்கும் பகுதியிலேயே பணிமாற்றம் கேட்டு வருகிறார்.

இதில் 12 வகுப்பு இறுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்த தனது தங்கையை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க கலை முயற்சி செய்கிறார். அதற்காக மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் அழைத்து செல்கிறார். உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்தும் கலையின் தங்கைக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

தனது தங்கையை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் கலை, பின்னர் சில தனியார் கல்லூரிகளை தொடர்பு கொள்கிறார். பெரும்பாலான கல்லூரிகளில் சீட் வாங்குவதற்கு லஞ்சமாக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. அதன் பின்புலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் மருத்துவ சீட்களை விற்று வருகின்றனர். அதில் வசூலிக்கப்படும் பணத்தை கல்லூரி நிர்வாகம் பெற்றுக் கொண்டு சீட் வழங்குகிறது.

இவ்வாறாக தனது சொந்த நிறுவனத்தின் மூலம் சேகரித்த பணத்துடன், அவருக்கு நெருக்கமானவர்கள் என நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பணஉதவி செய்ய, தேவையான பணத்தை சேகரிக்கும் கலையரசன், தனது தங்கையை வில்லன் கவுதமின் தனியார் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். இதில் கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் தனது தங்கையின் படிப்பும் நின்று போக, தனது பணத்தையும் இழந்த கலை, பணத்தை கொடுத்த தரகரிடம், பணத்தை திரும்பத் தர சொல்லி முறையிடுகிறார். ஆனால் அந்த தரகர், கலையை போலீஸை வைத்து மிரட்டி அனுப்பி விடுகிறார். கடைசியில் பணத்தை நல்ல முறையில் அவர்களிடம் இருந்து பெறமுடியாத வேதனையில், தனது குடும்பத்துடன் வெளியே செல்கிறார். அந்த சமயம் நேரே வந்த கார் ஒன்று கலையின் தங்கை மீது மோதியதில், அவரது தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகிறாள். கலையரசன் பணம் கொடுத்த புரோக்கர், அந்த காரில் இருந்து இறங்கி ஓடுகிறான்.

இதனைப் பார்த்து, கோபத்தின் உச்சிக்கே செல்லும் கலை, அதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை பழிவாங்க துடிக்கிறார். பின்னர் அவர்களை எப்படி தீர்த்துக் கட்டுகிறார்? தனது பணத்தை எப்படி மீட்டார்? இவ்வாறாக கல்லூரிகளில் நடக்கும் ஊழல், அங்கீகாரம் போன்ற பிரச்சனைகளை எப்படி களையெடுக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.

கலையரசனுக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மற்ற படங்களில் நடித்ததைப் போல இல்லாமல், இந்த படத்தில் கலையரசன் ஒரு நல்ல அண்ணனாக, சமூக அக்கறையுள்ள இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான சாத்னா டைட்டஸ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுத்திருக்கிறாரர். போலீஸ் அதிகாரி வேடம் சாத்னாவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

வில்லனாக வலம் வரும் கவுதம் பணக்காரனுக்கான ஸ்டைலிலும், லுக்கிலும் மிரட்டுகிறார். தனது கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டு வர எந்த முயற்சியும் செய்ய தாயராக இருக்கும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள கிருஷ்ணா, தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரத்தில், கலையரசனுக்கு துணையாக நிற்கும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம். படம் முழுக்க எதிர்மறையான கதாபாத்திரத்தில் வந்து கிருஷ்ணா மிரட்டியிருக்கிறார்.

ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி அவர்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். தரகர்களாக வலம் வரும் சரிதிரன், வினோத் என அனைவரும் அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

மருத்துவ படிப்பில் நடக்கும் ஊழல்கள் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும், அதனை பிரதிபலிக்காமல் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கும் சக்தி ராஜசேகரன் புதிய முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சனையை புதிய கண்ணோட்டத்தில் காட்டியிருப்பது படத்திற்கு பலம். அதுவும் பள்ளி பருவத்தை முடித்துவிட்டு கல்லூரியில் சேரவிருக்கும் மாணிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார். 
 
மருத்துவ கவுன்சிலிங் தொடங்கவிருக்கும் வேளையில், இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கும் அவரது மனநிலையை பாராட்டலாம். இன்றளவும் கல்லூரிகள் பல அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது. அதில் அதிக கட்டணங்களை செலுத்தி மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு சேரும் மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்தெடுக்க பெற்றோர் உறுதிணையாக நிற்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்பதை எய்தவன் மூலம் சிறப்பான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர். படத்தில் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருப்பதுடன் ரசிக்கும்படியும் இருக்கிறது.

பிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. பார்த்தவ் பார்கோ பின்னணி இசையில் நல்ல முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக சாண்ட்ரா எமி ஆடியிருக்கும் சிங்காரி என்ற குத்துப்பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளது.

மொத்தத்தில் `எய்தவன்' மருத்துவத்தின் மறுபக்கம்.
Share
Banner

Post A Comment: