ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்திருக்கும் புகார்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்களும் தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கியது. இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் பணப் பட்டுவாடா ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாளே அவரது வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 7-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்த போதுதான் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று முன்தினம் (10-ந்தேதி) நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ‘‘ராடான் மீடியா ஒர்க்ஸ்’’ நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ராதிகா வெளியில் சென்றிருந்ததால் இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்கு சென்று 2-வது முறையாக விசாரணை நடத்தினர். பின்னர் சரத்குமாரின் காரில் ஏறிய அதிகாரிகள் ராடான் நிறுவனத்துக்கு அவருடன் வந்தனர். இரவு 9 மணி வரை நடந்த இந்த சோதனையின் போது ராடான் நிறுவனத்தில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சரத்குமாரிடம் 3-வது முறையாக விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இன்று பிற்பகலில் சரத்குமார் ஆஜராகிறார். அப்போது ராடான் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரி அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த உள்ளனர்.
Post A Comment: