Propellerads

About

Navigation
Recent News

ப.பாண்டி

நடிகர்: ராஜ்கிரண்
நடிகை: ரேவதி
இயக்குனர்: தனுஷ்
இசை: சான் ரோல்டன்
ஓளிப்பதிவு: வேல்ராஜ் ஆர்


சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார்.

இதனால் போலீஸ் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது பிரசன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரணிடம் பிரசன்னா கடுமையாக நடந்துகொள்கிறார். எனவே, இவர்களுக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தனது புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் செய்கிறார்.

அப்போது வழியில் அவரது வயதையொட்டிய சிலபேர் நண்பர்களாக கிடைக்க, அவர்களிடம் தனது முதல் காதலியை பார்க்க செல்வதாக கூறுகிறார். அவள் எங்கிருக்கிறாள்? என்பது தெரியாத ராஜ்கிரணுக்கு, நண்பர்கள் பேஸ்புக் பற்றி அவருக்கு தெரியவைத்து, அதன்மூலம் அவரது காதலியை தேட துணை புரிகிறார்கள்.

அதன்படி, ராஜ்கிரணும் தனது காதலி ஐதராபாத்தில் இருப்பதாக அறிந்து, அங்கே செல்ல முடிவெடுக்கிறார். இதற்கிடையில், அப்பாவை காணாது தவிக்கும் பிரசன்னா, அவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

கடைசியில், ராஜ்கிரண் தனது முன்னாள் காதலியை தேடிக் கண்டுபிடித்தாரா? பிரசன்னாவும் காணாமல் போன தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை. இதற்கிடையே, ராஜ்கிரணின் இளமை கால நினைவுகளும் வந்து கதையை நகர்த்தி செல்கிறது.

ராஜ்கிரண், பவர் பாண்டியாக படம் முழுக்க பவருடன் வலம் வருகிறார். குழந்தைகளுக்கு நல்ல தாத்தாவாகவும், மகனுக்கு நல்ல அப்பாவாகவும் அழகாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கையில் சாந்தமாகவும், பிற்பாதியில் தனக்காக வாழும் வாழ்க்கையில் இளமை துள்ளலுடன், மாடர்ன் உடையில் வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

படம் முழுக்க இவர் பேசும் பாசமிகு வசனங்கள் அனைவரையும் கவரும். ரேவதியுடன் தன்னுடைய ஆசையை சொல்லும்போது வெட்கப்படும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. பவர் பாண்டி கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக பிரதிபலித்திருக்க முடியாது. ராஜ்கிரணை தேர்வு செய்தபோதே தனுஷ் பாதி வெற்றிபெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டும் ரேவதி, இடைவேளைக்கு பிறகே வருகிறார். இவருக்கான காட்சிகள் கொஞ்சம்தான் என்றாலும், அவருடைய அனுபவ நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இளம்வயது ராஜ்கிரணாக வரும் தனுஷுக்கும், இளம் வயது ரேவதியாக வரும் மடோனா செபஸ்டியானுக்கும் இடையே உண்டான காதல் காட்சிகள் மனதில் ரீங்காரமிடுகின்றன.

பிரசன்னா, பாசமிகு தந்தைக்கு பொறுப்பான மகனாக வருகிறார். ராஜ்கிரண் செய்யும் சில செய்கைகளால் அவர்மீது கோபப்படும் பிரசன்னா, அவர் பிரிந்துசென்றபிறகு, அவரை நினைத்து வருந்துவதும், அவருடைய பெருமைகளை மனைவியிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் இவருக்குத்தான் அதிகமாக இருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் கவரும்விதமாக இருக்கிறது. அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு இவர் கூறும் அறிவுரைகள் எல்லாம் பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்விதமாக அமைந்திருக்கிறது.

சாயா சிங் பொறுப்பான மனைவியாகவும், மாமனாருக்கு அடங்கி நடக்கும் மருமகளாகவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். குழந்தைகளாக வரும் மாஸ்டர் ராகவன், பேபி சவி ஷர்மா கேமரா முன் நிற்பது முதன்முறை என்றாலும், அது தெரியாத அளவுக்கு அழகாகவும், தைரியமாகவும் நடித்திருக்கிறார்கள்.

ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெற்றோர்களை பிள்ளைகள் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்? அந்த பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பெற்றோர்களுக்கான சுதந்திரத்தை பிள்ளைகள் கொடுக்கிறார்களா? என்பதையெல்லாம் இப்படத்தில் கேள்வியாக எழுப்பி, அதற்கான பதிலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். இருக்கும்போதே அவர்களை சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் பிள்ளைகள் வாழவைக்கவேண்டும் என்றும், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் பிள்ளைகளுக்கு புரிய வைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். தனுஷ் தனது முதல் படத்திலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும்படியான ஒரு படத்தை கொடுத்ததற்கு நிச்சயம் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடியாக வரும் ‘வெண்பனிமலரே’ பாடல் தென்றலாக வருடிச் செல்கிறது. அதேபோல், இளம்வயது பவர் பாண்டியின் காதல் பாடலாக வரும் ‘பார்த்தேன்’ பாடலும் காதலை அழகாக சொல்லியிருக்கிறது. பின்னணி இசையிலும் ஷான் ரோல்டன் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒருசில காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் வசனங்கள் இல்லாமலேயே கதையை பேசவைக்கிறது.

மொத்தத்தில் ‘ப.பாண்டி’ பவர்புல் பாண்டி.
Share
Banner

Post A Comment: