காஸ்மோரா முதல் பார்வை... ஓர் பார்வை!
கார்த்திக், நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் காஸ்மோரா. கார்த்தியின் கேரியரில் முதன் முதலாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம். அதாவது 60 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மாயா, ஜோக்கர் என்ற சிறிய படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். படத்தை பற்றிய முதல் பார்வை...
* காஸ்மோரா வழக்கமான படம் இல்லை. பேண்டசி கலந்த சமூக படம்.
படத்தின் கதை நாயகர்கள் பிளாக் மேஜிக் மனிதர்கள். அதவாது செய்வினை வைப்பவர்கள், எடுப்பவர்கள், மந்திரவாதிகள், அகோரிகள் என இன்னொரு உலகத்தில் வாழ்கிறவர்கள்தான் கதை மாந்தர்கள்.
* படத்தில் கார்த்திக்கு 3 வேடங்கள். ஒருவன் கஸ்மோரா அவன் நிகழ்கால உலகத்தில் வாழ்கிறவன். இன்னொருவன் ராஜ்நாயக் சரித்திர காலத்தில் வாழ்ந்த கொடூர மன்னன். மூன்றாவது கேரக்டர் இப்போதைக்கு ரகசியம். ராஜ்நாயக் கேரக்டருக்காக 47 விதமான மேக்அப் போட்டுப்பார்த்து அதிலிருந்து தேர்வு செய்ததுதான் மொட்டைத்தலை நீண்ட தாடி மீசை கெட்அப். காஸ்மோரா கேரக்டர் கொஞ்சம் காமெடி, ரொமான்ஸ் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. காஸ்மோராவுக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா.
* நயன்தாரா, ரத்தினமாதேவி என்கிற இளவரசியாக நடிக்கிறார். அழகும், திமிரும் கலந்த கேரக்டர். வாள் சண்டை கத்தி சண்டையெல்லாம் போடுகிறார். குதிரை மீதேறி பறக்கிறார்.
* படத்தில் சரித்திர காலகட்டம் 30 நிமிடங்கள் இடம் பெறுகிறது. பிரமாண்ட அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், போர்களங்கள், பலிபீடங்கள் என மிரட்டும். இதில் ராஜ்நாயக்கின் அரண்மனை மட்டும் பலகோடியில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும்படையை ஒற்றை ஆளாக நின்று எதிர்த்து போராடி கொன்று குவித்துவிட்டு வெறி சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டர் அதிரும்.
* சந்தோஷ் நாராயணனின் இசையில் படத்தில் மொத்தம் 4 பாடல்கள். பாடல்கள் படத்தின் கதையோடு தொடர்புடையவை.
* காஸ்மோராவின் கிராபிக்ஸ் பணிகள் 25 நிறுவனங்களில் இரவு பகலாக நடந்து வருகிறது.
* படத்தை தேனாண்டாள் பிலிம்சும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. படம் தீபாவளி விருந்தாக வருகிறது.


Post A Comment: