நடிகர் சமுத்திர கனி
நடிகை வினோதினி
இயக்குனர் சமுத்திரகனி
இசை இளையராஜா
ஓளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன்
சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அப்பா.
3 அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து சாதிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் அப்பா.
சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவன் வாழ்க்கையில் நல்ல, கெட்ட விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கிறார்.
அதேநேரத்தில் தம்பி ராமையா தனது மகனான ராகவனை, மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். தனது கனவுகளை, தனது லட்சியங்களை தனது மகன் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று அழுத்தம் கொடுத்து வளர்த்து வருகிறார்.
மறுமுனையில், நமோ நாராயணன் தனது மகனான நாசாத்தை எந்த வம்புக்கும் செல்லாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் இடம் தெரியாமலேயே வாழவேண்டும் என்று அறிவுரை கூறி வளர்த்து வருகிறார். இந்த மூன்று குடும்பங்களும் ஒரே பகுதியில் வசிக்கின்றன.
இப்படியாக வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் குழந்தைகளின் வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது என்பதை எடுத்துச் சொல்லும் படமே ‘அப்பா’.
சமுத்திரக்கனி, பொறுப்பான தந்தையாக படத்தில் ஜொலித்திருக்கிறார். இவர் மகனை மட்டுமல்லாது மகனின் நண்பர்களுக்கும் உதவும் தந்தையாக அனைவரையும் கவர்கிறார். தன் மகனை தொலைத்து தவிப்பது, தன் மனைவியை எண்ணி வருந்துவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
இன்றைய மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற முடியாமல் போனால் தற்கொலை செய்வது, கல்வி மட்டும்தான் வாழ்க்கை என்று வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கும் செயல்களினால் குழந்தைகள் வாழ்க்கையில் எந்தமாதிரியான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படத்தில் அப்பட்டமாக காட்சிப்படுத்தி சமூக அக்கறையுள்ள இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என வெற்றிநடை போடுகிறார் சமுத்திரக்கனி. இவரது வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.
தம்பிராமையா கிடா மீசையோடு கண்டிப்பான தந்தையாக படம் முழுக்க வலம் வருகிறார். இவருடைய கதாபாத்திரம் அனைவரையும் கோபத்திற்கு ஆளாக்கினாலும், இறுதியில், அந்த கதாபாத்திரத்தின் தன்மை அனுதாபத்தை பெற்றுவிடுகிறது. தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார் தம்பி ராமையா. நமோ நாராயணாவுக்கு சிறு கதாபாத்திரம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரங்களான விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நாசத், என அனைவரையும் சமுத்திரக்கனி திறம்பட திரையில் மின்ன வைத்திருக்கிறார். அனைவருடைய நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, நாசத் அனைவர் மனதிலும் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஒரேயோரு பாடல் மட்டுமே இருந்தாலும் மனதில் எளிதாக பதிகிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘அப்பா’ மதிப்புக்குரியவர்.
Post A Comment: