நடிகர் ஸ்ரீ ராம்
நடிகை ஆரா
இயக்குனர் அப்துல் மஜித்
இசை ஜே வி
ஓளிப்பதிவு வேல்முருகன்
சென்னையில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் ஸ்ரீராம். இவருக்கு ஆதரவாக இருந்த பாட்டி இறந்துவிடவே இவர் மட்டும் குடிசையில் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார் நாயகி ஆரா. இவருக்கு பொய் சொல்வதும் திருடுவதும் பிடிக்காது.
ஒரு நாள் ஆரா தான் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டின் கரண்ட் பில்லை கட்ட செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பணத்தையும், ஈ.பி. கார்டையும் தவறவிட்டு விடுகிறார். அந்த பணமும் ஈ.பி. கார்டும் ஸ்ரீராம் கையில் கிடைக்கிறது. ஆரா அதை தேடும் நிலையில், ஸ்ரீராம் பணத்தை கொடுக்கிறார். இதனால், இவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மதுசூதனன் தன்னுடைய கருப்பு பணத்தை பதுக்கி வைக்க சொல்லி ரவுடியான ராஜசிம்மனிடம் கொடுக்கிறார். ராஜசிம்மன் பணத்தை கூவத்தில் பதுக்கி வைக்கிறார். பதுக்கி வைத்த பணம் ஸ்ரீராமுக்கு கிடைக்கிறது. பணத்தை வைத்து ஸ்ரீராம் ஜாலியாக செலவு செய்து வருகிறார். காணாமல் போன பணத்தை தேடி ராஜசிம்மன் அலைகிறார்.
இறுதியில், ராஜசிம்மனிடம் ஸ்ரீராம் கிடைத்தாரா? பணத்தை வைத்திருந்த ஸ்ரீராமுக்கு என்ன நடந்தது? ஆராவும் ஸ்ரீராமும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘பசங்க’, ‘கோலிசோடா’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீராம் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். குப்பை பொறுக்கும் பையனாகவும், பணம் கிடைத்தவுடன் ஆடம்பரமாக செலவு செய்யும் பையனாகவும் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஆரா, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் மதுசூதனன். படம் முழுக்க தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் ராஜசிம்மன். இழந்த பணத்தை தேடும் இவரது நடிப்பு படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. மயில்சாமி, நாசர், சென்ட்ராயன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜித், தற்போது இந்த படத்தை இயக்கியிருக்கிறார். குப்பை சேகரிக்கும் ஒருவனுக்கு பணம் கிடைத்தால் வாழ்க்கை எப்படி திசை மாறும் என்பதை கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். ரசிகர்களை கவரும் வகையிலான காட்சிகள் இல்லாதது வருத்தம்.
ஜே.வி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். வேல் முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பைசா’ மதிப்பு குறைவு.
Post A Comment: