நடிகர் அர்ஜுன்
நடிகை மனிஷா கொய்ராலா
இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்
இசை இளையராஜா
ஓளிப்பதிவு கிருஷ்ணா ஸ்ரீராம்
பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பலத்த பாதுகாப்புடன் ஆய்வுக்கூடம் ஒன்றில் வைத்திருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்து அவரது உடல் திடீரென காணாமல் போய்விடுகிறது.
யார் அந்த உடலை திருடியிருப்பார்கள் என்று விசாரணை செய்வதற்கு போலீஸ் அதிகாரியான அர்ஜுன் நியமிக்கப்படுகிறார். அவர் மனிஷாவின் கணவரும் டாக்டருமான ஷாம் மீது சந்தேகப்படுகிறார். அவரிடம் மனிஷாவின் கொலை குறித்து விசாரணை நடத்துகிறார்.
இறுதியில் மனிஷாவின் உடலை யார் கடத்தினார்கள் என்பதை அர்ஜூன் கண்டுபிடித்தாரா? எதற்காக மனிஷாவின் உடலை கடத்தினார்கள்? மனிஷா எப்படி கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.
அர்ஜூனுக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்திலும் அவர் தனது கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக நடித்து அசத்தியிருக்கிறார். ஷாமிடம் விசாரணை நடத்தும் காட்சிகளில் எல்லாம் கம்பீரமான போலீசாக நம் கண்முன் நிற்கிறார். இதுவரை ஆக்ஷனில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக பார்த்த அர்ஜுன் இந்த படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார்.
ஷாமுக்கு இந்த படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். ஆரம்பம் முதல் இவரை நமக்கு வில்லன் போலவே காட்டியிருக்கிறார்கள். எந்தவித கதாபாத்திரத்தையும் தன்னால் சிறப்பாக செய்யமுடியும் என்பதை இந்த படத்தின் மூலம் சிறப்பாகவே நிரூபித்திருக்கிறார் ஷாம்.
மனிஷா கொய்ராலாவுக்கு இந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரம்தான். சிறிய இடைவெளிக்கு தமிழில் நடித்திருந்தாலும், தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். ஷாமின் காதலியாக வரும் அக்ஷா பட்டுக்கு இந்த படம் அழகான அறிமுகம் என்று சொல்லலாம். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார். அர்ஜுன் கூடவே விசாரணை அதிகாரியாக வரும் இந்த படத்தின் இயக்குனர் ரமேஷும் போலீஸ் அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரே இரவில் நடக்கும் கதைதான் படம். படத்தில் ஒருகாட்சிகூட வீணடிக்காமல் படம் ஆரம்பத்திலிருந்தே கதைக்குள் சென்று, இறுதி வரை அந்த கதையை சுற்றி சுற்றி விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். திரில்லர் படத்திலும் நம்மை பயமுறுத்தும்படியான காட்சிகளை வைத்து அசத்தியிருக்கிறார். ஒரு மர்மமான கொலைக்கு பின்னால் இருக்கும் பரபரப்பான சம்பவங்களை அழகான திரைக்கதை மூலம் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார். படத்தின் முடிவு யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவாக கொடுத்திருப்பது சிறப்பு.
இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டியிருப்பது மட்டுமில்லாமல், படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. அதிகமான காட்சிகள் மருத்துவமனையிலேயே படமாக்கியிருந்தாலும் அது தெரியாத அளவிற்கு கிருஷ்ணா ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், கிருஷ்ண ரெட்டியின் எடிட்டிங்கும் இருக்கிறது. மருத்துவமனையை செட் போட்டு அமைத்திருந்தாலும், அது செட் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘ஒரு மெல்லிய கோடு’ மிரட்டல்.
Post A Comment: