Propellerads
Navigation

ஜாக்சன் துரை

நடிகர் சிபிராஜ்
நடிகை பிந்து மாதவி
இயக்குனர் தரணிதரன்
இசை சித்தார்த் விபின்
ஓளிப்பதிவு ராஜா கிருஷ்ணன்

சென்னையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுவதால் அதை விசாரிக்க இவர் அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்கு செல்கிறார். கிராமத்தில் ஊர் தலைவரான சண்முக சுந்தரத்தின் மகளான பிந்து மாதவியை பார்க்கிறார். பார்த்தவுடனே இவர் மேல் காதல் வயப்படுகிறார்.

யோகி பாபுவின் ஆலோசனை படி, பிந்து மாதவியை திருமணம் செய்ய சண்முக சுந்தரத்திடமே பெண் கேட்கிறார். அதே சமயம், பிந்து மாதவியின் தாய்மாமன் கருணாகரன் பிந்து மாதவியை ‘நான் தான் திருமணம் செய்வேன்’ என்று கேட்கிறார்.

இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பெண் கேட்பதால், அந்த ஊரில் இருக்கும் பேய் பங்களாவில் 7 நாட்கள் தங்குபவருக்கே தன் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சண்முக சுந்தரம் கூறுகிறார். பிந்து மாதவியை திருமணம் செய்யும் ஆசையில் சிபிராஜும், கருணாகரனும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள்.

இறுதியில் பேய் பங்களாவில் என்ன நடந்தது? இருவரில் யார் பிந்து மாதவியை திருமணம் செய்துக் கொண்டார்கள்? ஊரே பயப்படும் அந்த பங்களாவில் இருப்பது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பில்டப் விடும் எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் சிபிராஜ். முந்தைய படங்களில் விட இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பயம், காதல் என்று உணர்வுகளில் சரியாக பங்களித்துள்ளார். வழக்கமான கதாநாயகி போல் வந்தாலும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிந்து மாதவி.

பிற்பாதியில் வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்கு பலம். ஆனால், சத்யராஜின் வழக்கமான நக்கல் நையாண்டி காட்சிகள் இல்லாதது வருத்தம். பிந்து மாதவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையும், சிபிராஜுடன் பங்களாவிற்கு செல்லும் காட்சிகளிலும் கருணாகரன் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பேய் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த பேய் படத்தை இயக்கி இருக்கிறார் தரணி தரன். வலிமையான நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு படத்தில் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் உள்ள காமெடி காட்சிகள் கைகொடுத்தாலும் பிற்பாதியில் பெரியதாக எடுபடவில்லை. வழக்கமான பேய் என்றாலும் அதிலும் சிறிது காமெடி கலந்து வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

யுவாவின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபினின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஜாக்சன் துரை’ மிதமான மிரட்டல்.
Share
Banner

Post A Comment: