கடந்த ஆண்டு டார்லிங் படத்தை தயாரித்து வெளியிட்ட ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த ஆண்டு டார்லிங் 2 என்ற படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். அவரே தன் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். கலையரசன், காளி வெங்கட், அர்ஜுன், மூனீஷ் காந்த் நடித்துள்ளனர். மாயா ஹீரோயின்.
படத்திற்கு ஜின் என்று பெயர் வைத்திருந்தார்கள். படத்தை பார்த்த ஞானவேல்ராஜா படத்தை வாங்கிக் கொண்டதோடு அதற்கு டார்லிங் 2 என்று பெயரையும் மாற்றினார். படத்தின் ஸ்டில்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் இது டார்லிங் கதையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஞானவேல்ராஜா கூறியதாவது: ஒரு பெயரோடு தொடர் படவரிசையில் வரும் இரண்டாவது படம் கதையிலோ, நடிக நடிகையரிலோ முதல் படத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்பது கட்டாயமில்லை.
படத்தின் குணாதிசயம் ஒன்றாக இருந்தாலே போதும். 5 நண்பர்கள் பேய் பிடித்த ஒரு நண்பனோடு சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள் என்ற ஒற்றை வரியே என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியிலும் திகிலோடு நகைச்சுவையும் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்ட திரைக்கதை, இது கண்டிப்பாக வெற்றிபெறும் என்று கூறியது.
அதோடு ஜின் என்ற பெயரை டார்லிங்-2 என்று மாறுவது பற்றிய யோசனை சிறு தயக்கமும் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த மாத துவக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப் படம் ரசிகப் பெருமக்களின் டார்லிங் ஆக இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை” என்கிறார் ஞானவேல்ராஜா. படத்தின் சிங்கிள் டிராக் பாடலை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார்.

Post A Comment: