எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமியில் பாக்சராக நடித்த ஜெயம்ரவி மீண்டும் நாயகனாக நடித்துள்ள படம் பூலோகம். இந்த படத்திற்காக பல மாதங்கள் பாக்சிங் பயிற்சி எடுத்து விட்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
வடசென்னை பாக்சர்கள் கதையில் உருவான இந்த படத்தில் ஜெயம்ரவியுடன் அமெரிக்க நடிகர் நாதன் ஜோன்ஸ் நடிக்கிறார் என்றதும் அவரது தந்தையான எடிட்டர் மோகனுக்கு ரொம்ப பயமாகி விட்டதாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், பூலோகம் படப்பிடிப்பு நடந்தபோது ஒருநாள் ஸ்பாட்டுக்கு சென்றேன். அப்போது அமெரிக்க நடிகர் நாதன் ஜோன்ஸ் ஒரு சேரில் அமர்ந்திருந்தார். அவர் அருகே போய் நான் நின்றேன். அப்போதே அவர் என் உயரத்துக்கு இருந்தார். நான் அவர் நடித்துள்ள படங்களை பார்த்திருக்கிறேன்.
நிஜத்திலும் பாக்சிங் தெரிந்தவரான அவர் சண்டை காட்சிகளில் பிரமாதமாக நடித்திருப்பார். அவர் நிஜத்திலும் பாக்சர் என்பதால் எனக்கு பயமாகி விட்டது.
நடிக்கும்போது அவரது அடி தடுமாறி ஜெயம்ரவியின் மேல் பட்டு விட்டால் என்ன செய்வது என்று ரொம்ப பயந்தேன்.
அதனால், ஜெயம்ரவி நடிக்கப்போகிற ஒவ்வொரு நாளும், ரொம்ப ஜாக்கிரதைப்பா. உன்கூட நடிக்கிறவர் பெரிய பாக்சர். அவர் ஒரு பஞ்ச் விட்டா போதும் தலை திரும்பிடும். பாத்துக்கோடா பாத்துக்கோடா என்று தினமும் சொல்லி அனுப்பினேன். படம் நல்லா வரனும். அதோடு என்புள்ளைக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்கிற பயம் இருந்து கொண்டேயிருந்தது என்கிறார் எடிட்டர் மோகன்.
Post A Comment: