ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்து 700 கோடி வரை வசூல் செய்து இந்தியத் திரையுலகையே வியக்க வைத்த படம் 'பாகுபலி'. இப்படத்திற்கு கடந்த ஆண்டின் சிறந்த படமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் படத்திற்கு எதற்காக விருது கொடுத்தார்கள் என்று சிலர் பேச ஆரம்பித்தார்கள். சமுதாயத்துக்குத் தேவையான எந்த ஒரு கருத்தும் இந்தப் படத்தில் இல்லை, இது ஒரு பொழுது போக்குப் படம்தான் என்றும் தேசிய விருதைப் பற்றிய விமர்சனம் எழுந்தது.
கன்னடத் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் கிரீஷ் காசரவள்ளி 'பாகுபலி' படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர், ''பாகுபலி' படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறித்து ஏற்கெனவே நாடு முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் படம் சமுதாயத்தில் உள்ள கஷ்டங்களைத் தீர்க்கும் படமாக அமையவில்லை. அது மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட சமுதாயம் அந்தப் படத்தில் மோசமாக காட்டப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தேசிய விருது வழங்கப்படும் போது அது பற்றிய விமர்சனங்களும், விவாதங்களும் எழுவது வாடிக்கைதான். 'பாகுபலி' படத்திற்குக் கிடைத்த விருதையும் அதைத் தாண்டித்தான் வாங்க வேண்டியிருக்கிறது.
Post A Comment: