Propellerads
Navigation

சிம்பு போலீசில் ஆஜர் ஆகாதது ஏன்?: டி.ராஜேந்தர் விளக்கம்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ‘பீப்’ பாடல் விவகாரத்தில் இருவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டது. சென்னை, கோவை போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அனிருத் கோவை போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

சிம்பு ஆஜராகவில்லை. சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு இசையமைத்துள்ள குறளரசனை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடந்தது. இதில் கலந்துகொண்ட டி.ராஜேந்தரிடம் போலீசில் சிம்பு ஆஜராகாமல் இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- 

‘‘பீப் பாடல் விவகாரத்தில் சென்னை மற்றும் கோவை போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஒரு குற்ற வழக்குக்கு இரண்டு இடத்தில் இருந்து சம்மன்கள் வந்தன. இரண்டு இடத்திலும் எப்படி ஆஜராக முடியும்?. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நியாயம் கிடைக்க போராடுகிறோம். கடவுள் அருளால் வழக்கில் வெற்றி பெறுவோம். போலீசில் ஆஜராகவேண்டும் என்று சிம்பு முடிவு எடுத்தால் முக்காடு போட்டுக்கொண்டு போக மாட்டார். லட்சக்கணக்கான ரசிகர்களுடன் ஆஜராகும் தெம்பு இருக்கிறது. 

சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தில் எனது மகன் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும். இளைஞர்களையும் கவரும். சிம்பு, சுருதிஹாசன், யுவன்சங்கர் ராஜா, ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பாடி உள்ளனர். 

நானும் ஒரு பாடலை பாடி இருக்கிறேன். சிம்பு, ஆண்ட்ரியா நடிக்க ஒரு பாடல் காட்சி விரைவில் படமாக உள்ளது. குறளரசனுக்கு சிறு வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தது. ஏராளமான மெட்டுக்களை உருவாக்கி வைத்து இருக்கிறார். அவை சிறப்பாக இருந்ததால் இந்த படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.’’ 

இவ்வாறு அவர் கூறினார். 

குறளரசன் கூறும்போது, ‘‘இது நம்ம ஆளு’ படம் என்னால் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது. பாடல்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக நேரம் எடுத்துக்கொண்டேன். ஒன்றரை வருடம் உழைத்து இசைப்பணியை சிறப்பாக செய்துள்ளேன்.’’ என்றார்.
Share
Banner

Post A Comment: