இயக்குனர் கே.பாக்கியராஜ் அவரது மகன் சாந்தனுவை நடிக்க வைத்து இயக்கிய படம் ‘சித்து பிளஸ்–2’ . இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் சாந்தினி. அடுத்து நகுல் ஜோடியாக ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் நடித்தார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது பா.விஜய் ஜோடியாக ‘நையப்புடை’, ஹரிஷ் கல்யாணுடன் ‘வில்அம்பு’, மற்றும் ‘என்னோடு விளையாடு’ உள்பட 4 படங்களில் சாந்தினி நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது... நான் சென்னை பெண். தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் நடிகை ஆனேன். பாக்கியராஜ் சார் படத்தில் அறிமுகமானதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்றாலும் உடனடியாக அதற்கு பலன் கிடைக்கவில்லை.
கவர்ச்சியைவிட திறமையான நடிகை என்று பெயர் வாங்குவதையே நான் விரும்புகிறேன். தற்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் நல்ல பாத்திரங்கள் அமைந்துள்ளன. நடிப்பதற்கு வாய்ப்புள்ள வேடங்கள். இந்த படங்கள் வெளியான பிறகு, எனது திறமைக்கு மேலும் பல வாய்ப்புகள் என்னை தேடிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மிகவும் வளர்ந்திருக்கிறது. கவர்ச்சியைவிட சிறந்த நடிப்பையே விரும்புகிறார்கள். கதைக்கு தகுந்த கவர்ச்சி தேவை என்றாலும் சிறந்த நடிப்புதான் நிலையான இடத்தை தரும். எனவே நான் கவர்ச்சியைவிட நடிப்பையே அதிகம் நம்புகிறேன். ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் என்னை உயர்த்தும் என்றார்.

Post A Comment: